Sarath Babu Passed Away - சரத்பாபுவின் நிறைவேறாத ஆசை.. அவருக்கு இப்படி ஒரு சோகமா?
சென்னை: Sarath Babu Passed Away (சரத்பாபு உயிரிழப்பு) உடல்நலக்குறைவால் உயிரிழந்த நடிகர் சரத்பாபுவின் நிறைவேறாத ஆசை குறித்து தெரியவந்திருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தமிழ் திரையுலகின் மூலம் அடையாளப்பட்டவர் நடிகர் சரத்பாபு. கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப் பிரவேசம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு எந்தவித அலட்டலும் இல்லாமல் நியாயம் செய்தவர் சரத்பாபு.

ஹீரோவாக நடிக்க ஆசையில்லை: குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்துவிட்டால் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை பலருக்கு எழுந்துவிடும் சூழலில் சரத்பாபுவோ ஹீரோவாக நடிக்கக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார். குணசித்திர கதாபாத்திரங்களில் தன்னைப்போல் யாரும் நடிக்கமாட்டார்கள் என்ற பெயரை எடுப்பதற்கு முனைப்போடு செயல்பட்டவர். அதன் காரணமாகவே கிட்டத்தட்ட 30 வருடங்கள் மிகச்சிறந்த குணசித்திர நடிகராக வலம் வந்தார்.
ரஜினியுடன் சூப்பர் கெமிஸ்ட்ரி: எத்தனையோ நடிகர்களோடு அவர் நடித்திருந்தாலும் ரஜினியோடு அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட்டானவை. குறிப்பாக முத்து, அண்ணாமலை படங்களை பார்த்த 90ஸ் கிட்ஸ் சரத்பாபு உண்மையிலேயே ரஜினிகாந்த்தின் நண்பர்தானோ என நினைக்கும் அளவுக்கு அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. இதனாலேயே ரஜினியின் குட் புக்கில் சரத்பாபு இருந்தார்.
உயிரிழந்த சரத்பாபு: தமிழில் கடைசியாக வசந்தமுல்லை படத்திலும், தெலுங்கில் கடைசியாக வக்கீல் சாப் படத்திலும் நடித்திருந்த சரத்பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்துவருவதாக கூறப்பட்டது. தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று ஹைதராபாத்தில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

நிறைவேறாத ஆசை: மிகச்சிறந்த நடிகராக இருந்தாலும் அவருக்கு முதலில் நடிப்பதில் ஆர்வம் இருக்கவில்லை. சரத்பாபு தன்னுடைய தொழிலை கவனித்துக்கொள்ள வேண்டும் என தொழிலதிபரான அவரது தந்தை நினைத்திருக்க, சரத்பாபுவுக்கோ காவல் துறை அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை பள்ளிக்காலத்தில் இருந்திருக்கிறது. ஆனால் அவருக்கு கிட்டப்பார்வை பிரச்னை உருவானதால் அந்த ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது. ஒருவேளை அவருக்கு அந்த பிரச்னை வராமல் இருந்திருந்தால் நிச்சயம் அவர் காவல் துறை அதிகாரியாகத்தான் மாறியிருப்பார்.
ரஜினி இரங்கல்: முன்னதாக, சென்னை கொண்டு வரப்பட்ட சரத்பாபுவின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் சிகரெட் அடித்தாலே சரத்பாபு தட்டிவிடுவான். சிகரெட் பழக்கம் அவனுக்கு சுத்தமாகவே பிடிக்காது. நான் சிகரெட் பிடிக்கக்கூடாது என்பதில் ரொம்பவே கண்டிப்பாக இருந்தவன். யாரிடமும் கோபம் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் பழகக்கூடியவன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்றார்.


Click it and Unblock the Notifications











