துணிவு கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த அஜித் ரசிகர்.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சரத்குமார்
சென்னை : துணிவு கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த அஜித் ரசிகரின் குடும்பத்தினரை நடிகர் சரத்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அஜித் நடித்த துணிவு திரைப்படம் ஜனவரி 11ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் மூன்றாவது முறையாக இப்படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர்.

வாரிசு VS துணிவு
துணிவு திரைப்படம் ஜனவரி 11ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வாரிசு திரைப்படம் ஜனவரி 12ந் தேதி வெளியாகும் என்று பரவலாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால், வாரிசு படக்குழு ஜனவரி 11ந் தேதியே வெளியாகும் என அதிரடியான அறிவிப்பை வெளியிட்டது. ஜில்லா, வீரம் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு தல, தளபதி படங்கள் ஒரே நாளில் வெளியாகின.

கொண்டாடிய ரசிகர்கள்
இரண்டு படங்களும் ஒரே நாளின் வெளியானதால் இரண்டு ரசிகர்களும் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் படவெளியீட்டை தடபுடலாக கொண்டாடினார்கள். சென்னை ரோகினி திரையரங்கில் வாரிசு படத்தின் பேனர்களை, அஜித் ரசிகர்கள் கிழித்தால், பதிலுக்கு துணிவு பட பேனரை விஜய் ரசிகர்கள் கிழித்தனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அதுமட்டுமில்லாமல், படம் பார்க்க ஒட்டுமொத்தமாக ரசிகர்கள் முட்டி அடித்துக்கொண்டு உள்ளே நுழைந்ததால், ரோகினி தியேட்டர் கண்ணாடி உடைக்கப்பட்டது.

அஜித் ரசிகர் உயிரிழந்தார்
இதையடுத்து, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரத், துணிவு படம் பார்த்த மகிழ்ச்சியில், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்து ஏறி டான்ஸ் ஆடிய போது, தவறிவிழுந்து முதுகுத்தண்டில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

ஆறுதல் கூறிய சரத்குமார்
இந்நிலையில், வீட்டிற்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் இன்று காலை சென்றார். மாணவரின் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த பரத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் பரத்தின் சகோதரருக்கும் அவரது பெற்றோருக்கும் ஆறுதல் கூறியதோடு நிதியுதவி வழங்கினார். அப்போது பரத்தின் தாயார், நடிகர் அஜித் தரப்பிலிருந்து எந்த ஒரு ஆறுதலும் தெரிவிக்காத நிலையில் நீங்கள் வந்து ஆறுதல் தெரிவித்தது எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது என்று கண்ணீர் மல்க கூறினார்.

தர்ம சங்கடத்தில் அஜித்
நடிகர் அஜித்தின் ரசிகர் உயிரிழந்த நிலையில், அவரது தரப்பில் இருந்து இதுவரை, ஆறுதலோ,குறைந்தபட்சம் ரசிகர்களுக்கு அறிவுரை கூறி ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. இந்த நேரத்தில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் நேரில் சென்று ஆறுதல் கூறியிருப்பது அஜித் ரசிகர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











