அதென்ன தோனியை மட்டும் குத்தம் சொல்வது?: சரத்குமார், சித்தார்த் குமுறல்
சென்னை: தோனியை பலரும் விமர்சித்து வரும் நிலையில் நடிகர்கள் சரத்குமார், சித்தார்த் ஆகியோர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து, இந்திய அணிகள் மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது.

நேற்றைய போட்டியில் தோனி மெதுவாக விளையாடியது தான் அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறி ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள். அதிக ரன்கள் தேவைப்படுகிறது என்று தெரிந்தும் தோனி 4, 6 என்று அடிக்காமல் சிங்கிளாக அடித்து சொதப்பிவிட்டார் என்று அவரை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அணியில் 11 பேர் இருந்தும் அனைவரும் தோனியை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதும், குறை கூறுவதும் சரியில்லை. இந்நிலையில் நடிகர்கள் சரத்குமார், சித்தார்த் ஆகியோர் தோனிக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளனர்.
தோனி பற்றி சரத்குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தோனி சிறப்பாக விளையாடி வரும் நிலையில் அது ஏன் அவரின் திறமை பற்றி அடிக்கடி ஆராய்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. நேற்றைய போட்டியில் கோஹ்லி, பாண்டியாவால் ஃபோர்கள் மற்றும் சிக்ஸுகள் அடிக்க முடிந்தது என்றால் அவர்கள் ஏன் ரன் ரேட்டை கூட்டவில்லை. இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதை நாம் விமர்சிக்காமல், அணிக்கு ஆதரவாக இருப்போம் #WorldCup2019 @msdhoni என்று தெரிவித்துள்ளார்.
சித்தார்த் தோனியை ஆதரித்து போட்டுள்ள ட்வீட்டில் தெரிவித்திருப்பதாவது,
தோனியை வெறுக்கும் அளவுக்கு முட்டாள்கள் இருப்பது தெரிந்தால் நாம் எப்படிப்பட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பது புரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டிகள் துவங்கியதில் இருந்தே தோனியை சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கிறார்கள். அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் பேசினால் அவர்களையும் திட்டுகிறார்கள். ஏதோ தோனி திறமையே இல்லாமல் அணியின் திறமையை வைத்து பெயர் வாங்குவதாக பேசுகிறார்கள். தோனி ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேவையே இல்லாமல் அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள்.
திறமை இல்லாமலா தோனி இந்திய அணியில் இடம்பெற்றிருப்பார், இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடித்திருப்பார் மக்களே?


Click it and Unblock the Notifications











