தேர்தலுக்கு பிறகு த.வெ.க இருக்குமா? விஜய்யை கடுமையாக விமர்சித்த சரத்குமார்!
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருந்தாலும், தேர்தலை நேரடியாக எதிர்கொண்டு மக்களிடம் தன்னை நிரூபிக்கும் வரை, அவரை ஒரு முழுமையான அரசியல் தலைவராக மதிப்பிட முடியாது என நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்ற நடிகர் சரத்குமார், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசியல், தேர்தல் வியூகம் மற்றும் நடிகர் விஜய் அரசியல் குறித்த எழுந்த கேள்விகளுக்கு அவர் விரிவாக பதிலளித்தார்.

நடிகர் சரத்குமார் : நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த சரத்குமார், "மக்களின் குறைகளை நேரில் கேட்டு, அவர்களுடன் தொடர்ந்து பயணிப்பவர்களே உண்மையான தலைவர்களாகவும், மக்களின் ஹீரோக்களாகவும் உருவாக முடியும்". "ஒரு அரசியல் கட்சி தேர்தலைச் சந்திக்காத வரை, அதன் உண்மையான பலத்தையும், நோக்கத்தையும் மதிப்பிட முடியாது. தேர்தலில் போட்டியிட்டு, மக்களிடம் தங்களின் கொள்கைகள், சித்தாந்தங்களை தெளிவாக அறிவிக்க வேண்டும். அதன்பிறகே, அந்த அரசியல் பயணம் எந்த திசையில் செல்கிறது என்பது புரியும்.
விஜய் தேர்தலில் போட்டியிடட்டும்: தற்போதைய நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளில், தனிப்பட்ட விமர்சனங்களும், தாக்குதல்களும் அதிகமாகவே காணப்படுகின்றன. ஆனால், தேர்தல் களத்தில் இறங்கி மக்களின் ஆதரவை நேரடியாகப் பெறும் வரை, அவரை ஒரு முழுமையான அரசியல் தலைவராக கருத முடியாது. விஜய் தேர்தலில் போட்டியிட்ட பின்னரே, அவரது அரசியல் நிலைப்பாடு மற்றும் மக்கள் ஆதரவு என்ன என்பது தெளிவாக வெளிப்படும் என்றார்.
தேர்தலுக்கு பின் த.வெ.க இருக்குமா: தொடர்ந்து, நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் குறித்து பேசிய சரத்குமார், ஜன நாயகன் அவரது கடைசிப் படமாக என்பது அவர்களின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும். தேர்தலுக்குப் பிறகும் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை தொடர்ந்து செயல்படுத்துவாரா? என்பது தெரிய வரும் என்று பேசிய சரத்குமார். பாஜகவின் தேர்தல் வியூகம் குறித்து மாநிலத் தலைமையுடன் கலந்துரையாடிய பின்னரே தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, மாநிலத் தலைமையுடன் கலந்துரையாடி, பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது முடிவு செய்யப்படும். அதன் பின்னரே தென்காசி தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.


Click it and Unblock the Notifications











