நடிகர் சங்கத் தேர்தல்: செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத்தலைவர் பதவிக்கு சிம்பு வேட்புமனு தாக்கல்
சென்னை: நடிகர் சங்க தேர்தல் வருகிற 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார்.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தி.நகர் அபிபுல்லா சாலையில் பழைய நடிகர் சங்க கட்டிடம் அருகே உள்ள அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் சரத்குமார் நேற்று காலை தேர்தல் அதிகாரியான நீதிபதி பத்மநாபனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அவரது அணியினரும் சென்றிருந்தனர்.

தொடர்ந்து இன்று காலை விஷால் அணியினர் நீதிபதி பத்மநாபனிடம் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். விஷாலுடன் அவரது அணியினரும் உடன் சென்றிருந்தனர்.
இந்நிலையில் சரத்குமார் அணியிலிருந்து செயலாளர் பதவிக்கு ராதாரவியும், துணைத்தலைவர் பதவிக்கு சிம்புவும் வேட்பு மனுக்களை இன்று மதியம் தாக்கல் செய்துள்ளனர். பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
வேட்புமனு தாக்கல் செய்தபின்னர் சிம்பு செய்தியாளர்களிடம் "நடிகர் சங்கத்தில் உள்ள அனைவரும் ஒரே குடும்பத்தினர், நடிகர் சங்க பிரச்சனையில் ஒரே அணியாக செயல்படலாம் என பேச்சு வார்த்தை நடத்தினேன். விஷால் அணியுடன் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்ததால் தேர்தலில் போட்டியிடும் சூழல் உருவாகி விட்டது" என்று கூறினார்.
ராதாரவி பேசும்போது "பணம் வாங்கிக்கொண்டு நடிகர் சங்க தேர்தலில் சிலர் போட்டியிடுகின்றனர், என் மீதான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி கண்டிப்பாக வெற்றி பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
இரண்டு அணியினரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருப்பதால் தற்போது நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.
தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்புமனுக்கள் 4-ந்தேதி (ஞாயிறு) காலை பரிசீலிக்கப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு போட்டியிட தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இறுதி வேட்பாளர் பட்டியல் 8-ந் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும். சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











