வீதிக்கு வந்த பருத்திவீரன் சரவணன் வீட்டு பிரச்னை.. முதல் மனைவி கொடுத்த புகார்.. என்ன நடந்தது?
சென்னை: நடிகர் சரவணன் 90களில் ஹீரோவாக வலம் வந்து இப்போது குணசித்திர நடிகராக இருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வித் லவ் திரைப்படம் வெளியானது. அதில் அவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றது. அடுத்ததாக போலீஸ் ஃபேமிலி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் மீது அவருடைய முதல் மனைவி புகார் அளித்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வைதேகி வந்தாச்சு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சரவணன். அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதேசமயம் சரவணனுக்கு விஜயகாந்த்தின் நிறம், முக சாயல் உள்ளிட்டவைகள் இருந்ததால் அவரை மினி விஜயகாந்த்தாகவே பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பே அவரது சறுக்கலுக்கு ஒரு காரணமாகவும் அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக படங்களில் நடித்து வெற்றி, தோல்வியை மாறி மாறி பார்த்துவந்த அவர் ஒருகட்டத்தில் திரைத்துறையிலிருந்து காணாமலே போய்விட்டார்.

பருத்திவீரன் சித்தப்பு: அந்த சூழலில்தான் கார்த்தியை வைத்து அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படத்தில் சித்தப்பு கேரக்டரில் நடித்தார். படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. சரவணனின் ரோலும், நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. கண்டிப்பாக இனிமேல் சரவணன் குணசித்திர நடிகராக பிஸியாவார் என்றுதான் எல்லோரும் கணித்தார்கள். ஆனால் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் வந்தாலும் பருத்திவீரனில் கிடைத்த பெயர் எதிலுமே கிடைக்கவில்லை.
இப்போது பிஸி: தொடர்ச்சியாக அவர் நடித்த படங்களும், அவரது கேரக்டர்களும் பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டது. அதேசமயம் சமீப நாட்களாக அவரது ஏற்கும் ரோல்கள் கொஞ்சம் ஈர்க்கும்படியாகவே இருக்கிறது. அந்தவகையில் கடைசியாக குற்றம் தவிர, வித் லவ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவற்றில் வித் லவ் படத்தில் செய்யாத குற்றத்துக்கு பழி சுமக்கும் வாத்தியாராக உருக வைத்திருந்தார். அடுத்ததாக போலீஸ் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இரண்டு திருமணங்கள்: இதற்கிடையே சரவணனுக்கு மொத்தம் இரண்டு திருமணங்கள் நடந்திருக்கின்றன. அதாவது, 2003ஆம் ஆண்டு சூர்யஸ்ரீ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. அதனையடுத்து 2019ஆம் ஆண்டு ஸ்ரீதேவி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இப்போது இரண்டு மனைவிகளுடன் மவுலிவாக்கத்தில் இருக்கும் அப்பார்ட்மென்ட்டில் வசித்துவருகிறார். இரண்டாவது மனைவியுடன் இவர் ஒரு வீட்டில் இருக்க; முதல் மனைவி சரவணன் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கிறார்.
புகார் கொடுத்த மனைவி: சூழல் இப்படி இருக்க சரவணன் தன்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு காவல் துறையிடம் முதல் மனைவிபுகார் அளித்தார். அதேபோல் சூர்யஸ்ரீக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பையும் வழங்கியது. இந்நிலையில் மீண்டும் ஒரு புகாரை அளித்திருக்கிறார் சூர்யஸ்ரீ.
அந்தப் புகாரில், "வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமராவை நடிகர் சரவணன் ஆளை வைத்து அகற்றிவிட்டார். என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கும் எனது உடைமைகளுக்கும் எது நடந்தாலும் சரவணன் மட்டும்தான் பொறுப்பு. முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் இன்னொரு திருமணம் செய்தது குறித்தும் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
