பொங்கலுக்கு வருவதாக கொம்பு சீவுனாங்க.. இப்போ சசிகுமாரின் அந்த படம் எப்போ ரிலீசாகுது தெரியுமா?
சென்னை: சசிகுமாரின் கொம்புவச்ச சிங்கம்டா படம் வரும் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சசிகுமாரின் மூன்று படங்கள் ரிலீசாகும் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் போஸ்டருடன் வெளியானது.
ஆனால், தற்போது பொங்கல் பண்டிகை முடிந்துள்ள நிலையில், கொம்புவச்ச சிங்கம்டா படத்திற்கு புதிய ரிலீஸ் தேதி கிடைத்துள்ளது.

இயக்குநர் யார்?
சசிகுமாரின் சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் கொம்புவச்ச சிங்கம்டா. சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் மற்றும் சத்ரியன் உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார். தற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைந்து பிரபாகரன் இயக்கியுள்ள படம் விரைவில் திரைக்கு வருகிறது.

தள்ளிப்போன ரிலீஸ்
பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த சசிகுமாரின் கொம்புவச்ச சிங்கம்டா படம் தற்போது தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் வெளியாகவில்லை என்றால் அடுத்த மாதம் பிப்ரவரியிலாவது வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் ஒரே அடியாக ஏப்ரல் மாதத்திற்கு படம் தள்ளிப் போயுள்ளது.

வெற்றிக் கூட்டணி
எஸ்.ஆர். பிரபாகரன் - சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுந்தரபாண்டியன் படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. ஆனால், அதற்கு பிறகு பிரபாகரனுக்கு பெரிய வெற்றி ஏதும் அமையவில்லை. இதனால், மீண்டும் தனது வெற்றி நாயகனான சசிகுமாருடன் இணைந்துள்ளார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா சபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும், மறைந்த இயக்குநர் மகேந்திரன் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

கடும் போட்டி
ஏப்ரல் மாதம் ஏற்கனவே தளபதி விஜய்யின் மாஸ்டர், விக்ரமின் கோப்ரா, சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் டி40, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் மற்றும் விஷாலின் சக்ரா என பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்நிலையில், சசிகுமாரின் படமும் அந்த ரேசில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளது.

அது எல்லாம் எப்போ
கொம்புவச்ச சிங்கம்டா படம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ள நிலையில், சசிகுமார் நடிப்பில் பொங்கலுக்கு வருவதாக சொன்ன பொன் ராமின் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம் உள்ளிட்ட படங்கள் எப்போ ரிலீசாகும் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. அது மட்டுமின்றி, நாடோடிகள் 2, நா நா, பரமகுரு என சசிகுமார் நடிப்பில் வரிசைக் கட்டி பல படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











