பட ரிலீஸுக்கு முன்பே ரசிகர்களை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்த சசிகுமாரின் ‘மை லார்டு’ டீம்!
சென்னை: "மை லார்ட்" திரைப்படத்தின் குழுவினர் சமீபத்தில் ரசிகர்களை ஆயிரக்கணக்கில் திரட்டிய ஒரு கோலாகலமான நேரடி சந்திப்பு நிகழ்வை நடத்தினர். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் இப்படம், பிப்ரவரி 13 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இவ்விழாவில் படக்குழுவினர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல்களைப் பாடியும், பட வசனங்களைப் பேசியும், திரைப்பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தனது உரையில், "'மை லார்ட்' திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு முழுமை தரும். சுவையான உணவு மனதுக்கு திருப்தி அளிப்பதுபோல இப்படம் நிறைவைத் தரும். இது வெறும் பொழுதுபோக்கை தாண்டி, மனிதர்களாகிய நாம் எந்த நிலையில் உள்ளோம் என்பதை உணர்த்தும் ஆழமான கதையையும் கொண்டிருக்கிறது," என்றார். சசிகுமாருக்கு 'டூரிஸ்ட் ஃபேமிலி'க்குப் பிறகு இது பெரும் வெற்றியடையும் என்றும், ராஜுமுருகனுக்கு வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.

இயக்குநர் ராஜுமுருகன், பிப்ரவரி 13 அன்று 'மை லார்ட்' வெளியாவதால், வேலண்டைன்ஸ் டேவுக்கும் பட தலைப்புக்கும் என்ன தொடர்பு எனப் பலரும் கேட்டதாகக் குறிப்பிட்டார். "சசிகுமார் மற்றும் சைத்ரா ஜே. ஆச்சார் ஏற்று நடித்துள்ள காதல் நிரம்பிய தம்பதியினரை மையமாகக் கொண்டே இப்படம் உருவாகியுள்ளது. கணவன்-மனைவியின் ஆழமான அன்புதான் உலகின் மிகப்பெரிய காதல் என்பதால், காதலர் தின சமயத்தில் இப்படம் வெளியாவது மிகப்பொருத்தமானது," என விளக்கினார்.
"காதல் என்பது வெறும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களை நேசிக்கும் மனநிலையே உண்மையான காதல் என நான் நம்புகிறேன். மனிதநேயத்தையும் அன்பையும் சசிகுமார் என்றால் மக்கள் அறிவார்கள். அவர் சினிமாவில் மட்டுமல்லாது வெளியிலும் அப்படியே வாழும் மனிதர் என்பதால், முத்துசிற்பி கதாபாத்திரத்திற்கு அவரைவிடச் சிறந்த தேர்வு இல்லை," என இயக்குநர் ராஜுமுருகன் பாராட்டினார்.

"கதாநாயகி சைத்ரா இந்தப் படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். 'மை லார்ட்' மூலம் அவர் தமிழுக்கு அறிமுகமாவதில் மகிழ்ச்சி. கர்நாடகாவைச் சேர்ந்த சைத்ராவை தமிழகம் நிச்சயமாக வாழவைக்கும்," என்றார் ராஜுமுருகன். "என் ஆத்மார்த்த நண்பரான இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அற்புதமான இசையை வழங்கியுள்ளார். பெரும் உழைப்புடன் மக்களுக்காகவே உருவான 'மை லார்ட்' படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்," என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நடிகை சைத்ரா ஜே. ஆச்சார், "இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமைகளுடன் இணைந்து நடித்தது இனிமையான மகிழ்ச்சி. இப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஷான் ரோல்டனின் இசையும் பாடல் ரசிப்புக்குரியது. சசிகுமார் ஒரு ஜாலியான நடிகர்; அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அரசியல் நையாண்டியும் கலந்திருப்பதால், இது பயனுள்ள படமாக இருக்கும். பிப்ரவரி 13 அன்று வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்," என கேட்டுக்கொண்டார்.
நடிகர் சசிகுமார் பேசுகையில், "'டூரிஸ்ட் ஃபேமிலி' போல 'மை லார்ட்' அன்பையும் மனிதநேயத்தையும் போதிக்கும். எனது படங்கள் குடும்பத்துடன் பார்க்க ஏற்றவை. இளம் தலைமுறைக்கு 'பொறுமையாக இருங்கள், மனிதநேயத்துடன் வாழுங்கள்' என இப்படம் உணர்த்தும். ராஜுமுருகனின் பாணியில், கலகலப்பான நகைச்சுவையுடன் படம் நகரும். சோகம், அழுகை இல்லாமல், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்," எனத் தெரிவித்தார்.
"கர்நாடகாவில் சிறந்த நடிகையாகத் திகழும் சைத்ரா, 'மை லார்ட்' மூலம் தமிழில் நல்ல அறிமுகத்தைப் பெற்று வளர்வார். குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்திற்கு உயிரூட்டினார்," என சசிகுமார் பாராட்டினார். "ஷான் ரோல்டனின் வசீகரக் குரல் எல்லா உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தும். 'டூரிஸ்ட் ஃபேமிலி'க்குப் பிறகு அவருடன் இணைந்தது மகிழ்ச்சி. பிப்ரவரி 13 அன்று இப்படத்தை அனைவரும் கொண்டாடுங்கள்," எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்களை எழுத, முனி பால்ராஜ் கலை இயக்கத்தையும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்ற, எம். ஷெரீப் நடனத்தையும், பி. சி. ஸ்டண்ட் சண்டைக் காட்சிகளையும் அமைத்துள்ளனர்.
அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை நையாண்டி பாணியில் விவரிக்கும் அதேவேளையில், இது ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள 'மை லார்ட்'டை அம்பேத்குமார் வழங்க, ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம், உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் வெளியாகும்.


Click it and Unblock the Notifications











