Sasikumar Net worth: சுப்ரமணியபுரம் சசிகுமாருக்கு 49 வயசாகுதாம்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இயக்குநர் பாலாவின் சேது படத்தில் உதவி இயக்குநராகவும் சியான் விக்ரமின் நண்பராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சசிகுமார்.

அவரது வித்தியாசமான சிரிப்பு மற்றும் மண் வாசனை மாறாத நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 49வது பிறந்தநாளை சசி குமார் கொண்டாடும் வேளையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
சசிகுமார் பிறந்தநாள்: 1974ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி மதுரையில் பிறந்தவர் சசிகுமார். கொடைக்கானலில் உள்ள புனித பீட்டர் பள்ளியில் படித்த சசிகுமார் மதுரையில் கல்லூரி படிப்பை முடித்தார். ஆனால், அவருக்குள் இருந்த சினிமா தாகம் அவரை பாலாவின் உதவி இயக்குநராக மாற்றியது.
சேது படத்திற்கு பிறகு இயக்குநர் ராம் மற்றும் அமீர் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களுடன் உதவி இயக்குநராக பணியாற்றி தான் கற்ற சினிமாவை சுப்ரமணியபுரம் எனும் முதல் படத்திலேயே உலகம் அறியும் அளவுக்கு ஒட்டுமொத்த வித்தையையும் காட்டி விட்டார். அதன் பின்னர், அவர் இயக்கிய ஈசன் திரைப்படம் பெரிதாக போகவில்லை.

சுப்ரமணியபுரம் டு அயோத்தி: நடிகராக சுப்ரமணியபுரம் படத்திலேயே ஸ்கோர் செய்த சசிகுமார் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், தாரை தப்பட்ட, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத்தேவா, அசுரவதம், பேட்ட, கென்னடி கிளப், அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, எனை நோக்கி பாயும் தோட்டா, உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம், ராஜவம்சம், அயோத்தி என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் மீண்டும் சசிகுமாருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. நந்தன், நா நா, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சொத்து மதிப்பு: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் சசிகுமாருக்கு சொந்த ஊரான மதுரையில் வீடு மற்றும் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சுமார் 35 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக சசிகுமார் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரு படத்துக்கு சுமார் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாகவும், ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பாதித்து வருவதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











