சுந்தரபாண்டியன் 100வது நாள் - கலைஞர்களின் வீடுதேடிப் போய் ஷீல்ட் கொடுத்த சசிகுமார்!
சுந்தரபாண்டியன் படத்தின் 100வது நாள் விழா ஷீல்டுகளை, ஒவ்வொரு கலைஞரின் வீடு தேடிப்போய் வழங்கி கவுரவித்துள்ளார் படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான சசிகுமார்.
எம் சசிகுமார் - லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து வெளியான படம் சுந்தரபாண்டியன். மிகப் பெரிய வெற்றியை, வசூலைத் தந்தது இந்தப் படம்.
சென்னை உள்பட சில இடங்களில் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. படத்தின் நூறாவது நாள் விழா ஷீல்டுகளை தனி விழாவாக வைத்து தராமல், புதுமையாக அவரவர் வீடுகளுக்கே போய் வழங்க முடிவு செய்தார் சசிகுமார்.

நெற்றியில் முத்தமிட்டு...
படத்தின் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரனுக்கு, தனது குரு பாலாவின் அலுவலகத்தில் வைத்து ஷீல்ட் வழங்கினார் சசிகுமார். அப்போது தன் சிஷ்யன் சசிகுமாரின் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தினார் பாலா.

லட்சுமி மேனன்
படத்தின் நாயகி லட்சுமி மேனனுக்கும் அவர் இருப்பிடத்துக்கே போய் ஷீல்ட் வழங்கி நன்றி தெரிவித்தார் சசிகுமார். அவருடன் இயக்குநர் பிரபாகரனும் சென்றிருந்தார்.

விஜய் சேதுபதி
இந்தப் படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. சொல்லப் போனால், அவரது வெற்றிக் கணக்கு தொடங்கிய படம் இது. அவருக்கும் வீடு தேடிச் சென்று ஷீல்டு வழங்கியுள்ளார் சசிகுமார்.

சூழ்ந்த ரசிகர்கள்
ஒவ்வொரு கலைஞரின் வீட்டுக்கு சசிகுமார் சென்றபோதும், அக்கம் பக்கத்திலிருந்த மக்கள், ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்டனர். அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து நன்றி தெரிவித்தார் சசிகுமார்.

ஊடகங்களுக்கு நன்றி...
தனது சுப்பிரமணியபுரம் தொடங்கி, சுந்தரபாண்டியன் வரை தொடர்ந்து ஆதரவளித்த ஊடகத்துறைக்கு நன்றி தெரிவித்து தனி அறிக்கையையும் வெளியிட்டுள்ளார் சசிகுமார்.

புத்திசாலி தயாரிப்பாளர்
எப்படியோ.. நூறாவது நாள் விழா என்ற பெயரில் பல லட்சம் செலவழித்துக் கொண்டிருக்காமல், சில ஆயிரங்களில் சிக்கனமாக முடித்து, வித்தியாசமான கொண்டாட்டம் என நல்ல பெயரையும் சம்பாதித்துக் கொண்ட சசிகுமாரின் புத்திசாலித்தனம்தான் இன்று திரையுலகுக்கு அவசியம் தேவை, என்பது இந்த விழா குறித்த பத்திரிகையாளர்களின் கமெண்ட்!!


Click it and Unblock the Notifications











