15 years of subramaniyapuram - சுப்ரமணியபுரம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவு.. சசிகுமார் நெகிழ்ச்சி
சென்னை: Subramaiyapuram (சுப்ரமணியபுரம்) சுப்ரமணியபுரம் வெளிவந்து 15 வருடங்கள் ஆகியிருக்கும் சூழலில் ரசிகர்களுக்கு சசிகுமார் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார்.
பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சசிகுமார். சேது, நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய சசிகுமார் அமீரிடமும் பணியாற்றினார். இதனையடுத்து சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகிய படம்.

தயாரிப்பாளரே இல்லை: சசிகுமார் இந்தப் படத்தின் கதையை பல தயாரிப்பாளர்களிடம் கூறினார். ஆனால் எந்தத் தயாரிப்பாளரும் படத்தை தயாரிக்க முன்வரவில்லை. மேலும் அமீர் தயாரிப்பதாக இருந்த சூழலில் அவராலும் தயாரிக்க முடியவில்லை. இதனையடுத்து பொறுக்காத சசிகுமார் தானே தயாரிக்கும் முடிவை எடுத்தார். எந்த அறிமுக இயக்குநரும் தனது முதல் படத்தை தானே தயாரிக்கும் ரிஸ்க்கை எடுக்கமாட்டார். ஆனால் சசிகுமாரோ கதை மீது இருக்கும் நம்பிக்கையின் காரணமாக அந்த ரிஸ்க்கை எடுத்தார்.
சாந்தனுதான் முதல் ஹீரோ: படத்தில் ஹீரோவாக முதலில் நடிக்கவிருந்தது இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. இதனையடுத்து படத்துக்குள் ஜெய் வந்தார். தன்னை ஹீரோவாக தேர்ந்தெடுத்ததற்கு நியாயம் செய்யும் விதமாக நடித்திருந்தார். குறிப்பாக க்ளைமேக்ஸில் அதிர்ச்சி விலகாத பார்வையோ சரிந்து விழும் இடத்தில் பெரிதாகவே ஸ்கோர் செய்திருப்பார். சுப்ரமணியபுரம்தான் ஜெய்யின் கரியர் பெஸ்ட்டாக கருதப்படுகிறது.
பெஸ்ட் கதை: சுப்ரமணியபுரத்தின் அடிநாதமே அந்தப் படத்தின் கதையும், கதைக்களமும், மேக்கிங்கும்தான். ரெட்ரோ காலத்து மதுரையை இதுவரை யாரும் அப்படி காட்சிப்படுத்தியதில்லை. ஒவ்வொரு சீனிலும் அவ்வளவு டீட்டெயிலிங்கோடு படம் இருக்கும். அதுமட்டுமின்றி நட்புக்குள்ளும், பழக்கத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற குணம் உள்ளவர்களுக்குள்ளும் அதிகாரம் பிடித்தவர்கள் ஊடுருவி செய்யும் அட்டூழியங்களை அவ்வளவு நுட்பமாக காட்சிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக இன்றுவரை கல்ட் க்ளாசிக் படமாக கொண்டாடப்படுகிறது சுப்ரமணியபுரம். மேலும் சசிகுமார் மீண்டும் இயக்க வர வேண்டும் என பலரும் வலியுறுத்துவதற்கு சுப்ரமணியபுரம் பெரிய காரணம்.

சசிகுமார் நெகிழ்ச்சி: இந்நிலையில் படம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் நிறைவடைகின்றன. இதுகுறித்து இயக்குநர் சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், சுப்ரமணியபுரம் வெளிவந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றுவரை என்னை அரவணைத்திருக்கும் அனைவருக்கும் நன்றியும் அன்பும். இத்தனை வருட காலத்திற்குப் பிறகு இப்பொழுது 'குருதித் துயர் படிந்த வரலாற்றை' இயக்கப் போகிறேன். உங்கள் வாழ்த்துகள் வேண்டி..அன்புடன் சசிகுமார்" என குறிப்பிட்டிருக்கிறார்.
அனுராக்கின் பாராட்டு: மேலும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் சுப்ரமணியபுரம் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "சுப்ரமணியபுரம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் என்ற படத்தை இயக்குவதற்கு இன்ஸ்பிரேஷன் சுப்பிரமணியபுரம் படம்தான். சசிகுமாருக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்திருக்கிறார்.
சசிகுமாரின் இயக்கம்: இதற்கிடையே சசிகுமார் பல வருடங்கள் கழித்து இயக்கத்தின் பக்கம் பார்வையை திருப்பியிருக்கிறார். அதன்படி வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை என்ற நாவலை அவர் இயக்கப்போகிறார். இதில் விஜயக்காந்த்தின் மகன் சண்முகபாண்டியன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











