ரஜினியும், சிவகுமாரும் சொன்ன அட்வைஸ்.. எல்லாமே மாறியது.. சசிக்குமார் ஷேரிங்ஸ்
சென்னை: சசிகுமார் கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். இரண்டு படங்கள் மட்டுமே அவர் இயக்கியிருந்தாலும் அந்த இரண்டு படங்களும் இன்றுவரை கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அந்த இரண்டு படங்களுக்கு பிறகு சசிகுமார் படங்கள் இயக்கவில்லை. மாறாக நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் கருடன் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது.
இயக்குநர் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சசிகுமார். சேது, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிவிட்டு தனியாக படம் இயக்க திட்டமிட்டு கதையை உருவாக்கி சாந்தனுவிடம் கூறினார். ஆனால் அதில் அவர் நடிக்க விரும்பவில்லை. அதேபோல் படத்தை தயாரிக்கவும் எந்த கம்பெனியும் முன்வரவில்லை. இதனையடுத்து ஜெய்யிடம் கதை சொல்லி ஓகே ஆனதை அடுத்து சுப்ரமணியபுரம் திரைப்படம் முதல் படியை தாண்டியது. ஆனால் யாரும் தயாரிக்க முன் வராததால் சசிகுமாரே படத்தையும் தயாரித்தார். ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு, ஸ்வாதி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு இந்தத் திரைப்படமானது வெளியானது.

மெகா ஹிட்டான சுப்ரமணியபுரம்: மதுரையை மையமாக வைத்தும், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநலத்துக்காக பலியாகும் இளைஞர்களை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. படத்தின் போஸ்டரை பார்த்து கிண்டல் செய்தவர்கள் எல்லாம் படத்தை பார்த்து வாயடைத்துப்போனார்கள். அந்த அளவுக்கு சசிகுமாரின் மேக்கிங் அட்டகாசமாக இருந்தது. சிறப்பான எமோஷன், சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் என பக்கா பேக்கேஜாக அமைந்தது சுப்ரமணியபுரம் திரைப்படம்.
ஈசனோடு ஒதுங்கிய சசிகுமார்: முதல் படமே மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் என்ற பெயரை எடுத்த சசிகுமார் அடுத்ததாக ஈசன் படத்தை இயக்கினார். அந்தப் படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்தப் படத்தோடு இயக்கத்திலிருந்து ஒதுங்கிவிட்டார் சசிகுமார். அதன் பிறகு ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்திவரும் அவர் சமீபத்தில் அயோத்தி படத்தில் நடித்தார். மந்திரமூர்த்தி இயக்கியிருந்த அயோத்தி நல்ல வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் சசிகுமார் மீண்டும் இயக்க வர வேண்டும் என ரசிகர்கள் நீண்ட வருடங்களாகவே கோரிக்கை வைத்துவருகின்றனர்.
மீண்டும் இயக்கம்: சூழல் இப்படி இருக்க குற்றப்பரம்பரை நாவலை சசிகுமார் வெப் சீரிஸாக இயக்குகிறார் என்றும்; விஜயகாந்த்தின் மகன் அதில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் கடந்த வருடம் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த அடுத்தக்கட்ட அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது அவர் கருடன் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படம் நாளை வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே கொடிவீரன் என்ற படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார் சசிகுமார்.
சசிகுமார் பேட்டி: இந்நிலையில் கருடன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகுமார் பேசுகையில், "எல்லோராலும் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும், நடிகராகவும் ஆகிவிட முடியாது. எல்லாவற்றையும் சேர்த்து ஒரே வேலையாகவும் பார்க்க முடியாது. ஒருமுறை நான் விமானத்தில் சென்றபோது சிவகுமார் என்னுடன் பயணித்தார். அப்போது அவர் என்னிடம், நீ நடிகன். படம் தயாரிக்காதே. என்னுடைய பிள்ளைகளுக்கும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
முகத்தில் வெளிப்பட்டுவிடும்: என்னதான் நீ படம் தயாரித்தாலும் இவர்களுக்கு இவ்வளவு பணம் தர வேண்டுமே என்ற எண்ணம் கேமரா முன் வரும்போது ஒரு இடத்தில் முகத்தில் வெளியாகிவிடும். அந்த எண்ணம் உனக்குள் வதுவிட்டால் நடிக்க முடியாது என்றார். அதேபோல் ரஜினிகாந்த்தும் என்னை அழைத்து நடிங்க, படம் தயாரிக்காதீங்க என்று சொன்னார். ஏனென்றால் இரண்டையும் சேர்த்து செய்வது கடினமான ஒன்று" என்றார்.


Click it and Unblock the Notifications











