ரஜினி படம் பார்த்துவிட்டு பணத்தை மதிக்கவில்லை.. சசிகுமார் பட்டுனு போட்டு உடைச்சிட்டாரே
சென்னை: சசிகுமார் கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். இரண்டு படங்கள் மட்டுமே அவர் இயக்கியிருந்தாலும் அந்த இரண்டு படங்களும் இன்றுவரை கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதிலும் சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டு படங்களுக்கு பிறகு இயக்கத்தை நிறுத்திய சசிகுமார் நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். அவரது நடிப்பில் ஃப்ரீடம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இயக்குநர்கள் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சசிகுமார். சேது, மௌனம் பேசியதே உள்ளிட்ட படங்களில் பணியாற்றிவிட்டு தனியாக படம் இயக்க திட்டமிட்டு கதையை உருவாக்கி சாந்தனுவிடம் கூறினார். ஆனால் அதில் அவர் நடிக்க விரும்பவில்லை. அதேபோல் படத்தை தயாரிக்கவும் எந்த கம்பெனியும் முன்வரவில்லை. இதனையடுத்து ஜெய்யிடம் கதை சொல்லி ஓகே ஆனதை அடுத்து படத்தை அவரே தயாரித்து இயக்கி நடிக்கவும் செய்தார்.
க்ளாசிக் பந்தயம் அடித்த சுப்ரமணியபுரம்: மதுரையை மையமாக வைத்தும், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநலத்துக்காக பலியாகும் இளைஞர்களை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. படத்தின் போஸ்டரை பார்த்து கிண்டல் செய்தவர்கள் எல்லாம் படத்தை பார்த்து வாயடைத்துப்போனார்கள். அந்த அளவுக்கு சசிகுமாரின் மேக்கிங் அட்டகாசமாக இருந்தது. சிறப்பான எமோஷனல், சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் என பக்கா பேக்கேஜாக அமைந்தது சுப்ரமணியபுரம் திரைப்படம்.
ஈசனோடு ஒதுங்கிய சசிகுமார்: முதல் படமே மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் என்ற பெயரை எடுத்த சசிக்குமார் அடுத்ததாக ஈசன் படத்தை இயக்கினார். அந்தப் படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்தப் படத்தோடு இயக்கத்திலிருந்து ஒதுங்கிவிட்டார் சசிக்குமார். அதன் பிறகு ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் சக்கைப்போடு போட்டது.

ஃப்ரீடம் திரைப்படம்: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றி சசியின் மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது. அதேசமயம் இந்தப் படத்தின் வெற்றியால் சம்பளத்தை எல்லாம் உயர்த்தமாட்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது நடிப்பில் ஃப்ரீடம் திரைப்படம் வெளியாகவுள்ளது. அப்படத்தை சத்யசிவா இயக்கியிருக்கிறார். படத்தின் டிரைலருக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துவருகின்றன.
சசியின் பேட்டி: இந்நிலையில் சசிகுமார் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், "பணம் என்றால் என்ன என்பது குறித்து இப்போது நிறையவே புரிந்துகொண்டேன். புரிந்துகொண்டேன் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் அந்தப் பணத்தை மதிக்க தெரிந்துகொண்டேன் என்று அர்த்தம். முதலில் எல்லாம் மதிக்காமல்தான் இருந்தேன். வெறும் பணம்தானே என்று சொல்லி சொல்லி பழகிவிட்டோம்.
படங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும்: அதுமட்டுமின்றி சில படங்கள் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக தளபதி படத்தில் ரத்தம் கொடுத்துவிட்டு ரஜினி பணம் கொடுக்கும்போது நன்றி சொல்வார்கள். உடனே அவரோ வெறும் பணம்தானே என்று சொல்வார். அதெல்லாம் பார்த்துவிட்டு நாங்கள் பணத்தை மதிக்கவே இல்லை. ஆனால் அந்தப் பணம் 40 வருடங்களாக என்னை மதிக்காமல் இருக்கிறாயா என்று கேட்டு அதை மதிக்க வைத்துவிட்டது. அதுதான் பணத்தின் குணம்" என்றார்.


Click it and Unblock the Notifications











