அஜித் குமாருக்கு நடந்த சித்ரவதை.. ரிதன்யாவுக்கு நடந்த கொடுமை. வெளிப்படையாக பேசிய சசிகுமார்!
சென்னை: போதைப் பொருள் விவகாரத்தை அடுத்து தமிழ்நாட்டில் திருப்புவனம் அஜித் குமார் காவலர்களால் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் பேர்திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வரதட்சனை கொடுமை காரணமாக திருமணமான சில மாதங்களிலேயே ரிதன்யா என்பவர் தற்கொலை செய்துக் கொண்டதும் பலரையும் உலுக்கி எடுத்து வருகிறது.
வரும் ஜூலை 10ம் தேதி இயக்குநர் சத்யா சிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஃப்ரீடம் படம் வெளியாகவுள்ள நிலையில், அதுதொடர்பாக சசிகுமார் அளித்த பேட்டியில், இந்த இரு பெரிய பிரச்னை குறித்தும் வெளிப்படையாக தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் சசிகுமார் ஈழத்தமிழராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நேற்று வெளியான ஃப்ரீடம் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
நெகட்டிவா நடிச்சா ஓடாது: அயோத்தி பட இயக்குநரிடமும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநரிடமும் சசிகுமார் சாரை ஏன் ஹீரோவாக தேர்வு செய்தீர்கள் என்கிற கேள்விக்கு, அவரை நல்லவன் என காட்டுவதற்காக தனியாக 2 சீன்கள் வைக்க தேவையில்லை என்று சொன்னார்கள். அதை எப்படி சார் மெயின்டெயின் பண்றீங்க, நீங்க நெகட்டிவா நடிச்சா நல்லாவே இருக்காது என்று கலாட்டா யூடியூப் சேனல் தொகுப்பாளர் கேட்க, ஆமாம், அசுரவதம் படத்தில் கொஞ்சம் நெகட்டிவா ட்ரை பண்ணேன், அது ஓடவே இல்லை, ஆனால், ஒரு நடிகனாக நெகட்டிவ் கதாபாத்திரங்களையும் நடிக்க முயற்சி செய்வேன் எனக் கூறியுள்ளார்.
போலீஸார் விசாரணையில் துன்புறுத்தக்கூடாது: சக மனுஷனை விசாரிக்கிறோம் என்கிற எண்ணம் போலீசாருக்கும் இருக்க வேண்டும். யாரையும் அடித்து துன்புறுத்தக் கூடாது. தவறு செய்திருந்தால் கூட அதை விசாரிக்க வேண்டிய வகையில் மட்டுமே விசாரிக்க வேண்டுமே தவிர சட்டத்துக்கு புறம்பாக காவலர்கள் விசாரணை நடத்துவதும், அடித்துக் கொல்வதும் கூடாது என வெளிப்படையாக திருப்புவனம் அஜித் குமார் மரணம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார் சசிகுமார்.
அதிகாரின்னே சொல்லக் கூடாது: இயக்குநர் சத்யா சிவா பேசும் போது, ஃப்ரீடம் படத்திலும், காவலர்களுக்கு எதிரான காட்சிகள் இருக்கே, எப்படி சமாளித்தீர்கள் என்கிற கேள்விக்கு அதிகாரின்னே சொல்லக் கூடாது என்றும் உண்மையாக நடக்கும் சித்ரவதை காட்சிகளை எல்லாம் படமாக எடுக்கும் ஃப்ரீடம் கூட உண்மையிலேயே இயக்குநர்களுக்கு இல்லை என்றும் ஓரளவுக்குத்தான் எங்களால் சொல்ல முடிகிறது என்றும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
வரதட்சனை கேட்க அசிங்கமா இல்லை: ஒரு மகளை பெத்து, வளர்த்து ஏகப்பட்ட செலவு செய்து கட்டிக் கொடுக்கிறோம். அந்த மகள் இல்லாமல் போய்விட்டால், பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும். வரதட்சனை கேட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்வதே அசிங்கமா இல்லை என சசிகுமார் வெளுத்து வாங்கி உள்ளார். காசுக்காக ஒரு உசுரு போவது எல்லாம் ஒருபோதும் நியாயமான செயலே கிடையாது. மனிதர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சமாவது மனமாற்றம் அடைந்தால் மட்டுமே சமூகம் மாறும். ரிதன்யா போன்று பல பெண்கள் இந்த வரதட்சனை கொடுமையால் தினமும் சித்ரவதைக்கு உள்ளாகுகின்றனர் என பேசியுள்ளார். வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ள ஃப்ரீடம் திரைப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ரசிகர்களை கனெக்ட் செய்யும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











