Subramaniahpuram: மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி... சசிகுமாரின் மதுர சம்பவம் லோடிங்!
சென்னை: சசிகுமார் இயக்குநராக அறிமுகமான சுப்ரமணியபுரம் திரைப்படம் 2008ம் ஆண்டு வெளியானது.
முதல் படத்திலேயே தரமான சம்பவம் செய்திருந்த சசிகுமார், அதன்பின்னர் நடிப்பில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் கடந்த வாரம் சுப்ரமணியபுரம் வெளியாகி 15 ஆண்டுகளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

அப்போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து மீண்டும் சுப்ரமணியபுரம் கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி
2008ல் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழில் சிறந்த கல்ட் சினிமாவாக கொண்டாடப்பட்டது. சசிகுமார் இயக்கிய இந்தப் படத்தில் அவருடன் ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மதுரையை பின்னணியாக வைத்து பீரியட் படமாக உருவான சுப்ரமணியபுரம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
நட்பு, காதல், துரோகம் என ரத்தமும் சதையுமாக சுப்ரமணியபுரம் படத்தை இயக்கியிருந்தார் சசிகுமார். கதை, திரைக்கதை, மேக்கிங் என எல்லாவிதத்திலும் படு மிரட்டலாக உருவாகியிருந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் அளவிலும் செம்ம மாஸ் காட்டிய இந்தப் படம் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுப்ரமணியபுரம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதையொட்டி '15yearsofSubramaniapuram' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.
மேலும், சுப்ரமணியபுரம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. அப்போது ரசிகர்களுடன் சேர்ந்து சசிகுமார், சமுத்திரகனி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் ரசிகர்களுடன் சேர்ந்து சுப்ரமணியபுரம் படத்தை பார்த்து ரசித்தனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகும் சுப்ரமணியபுரம் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், சுப்ரமணியபுரம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சசிகுமார் இயக்கத்தில் சமுத்திரகனி, ஜெய், கஞ்சா கருப்பு ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், இது சுப்ரமணியபுரம் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான கதை, திரைக்கதையை சசிகுமார் எழுதிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுப்ரமணியபுரம், ஈசன் என இரண்டு படங்களுக்குப் பின்னர் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் சசிகுமார். ஆனால், ரசிகர்களுக்கோ அவர் மீண்டும் சுப்ரமணியபுரம் படம் போல இன்னொரு படத்தை இயக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. அதற்கு தற்போது நேரம் வந்துவிட்டதாக ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











