சரசரவென வசூலைக் குவிக்குமா “சதுரங்க வேட்டை”- இந்தியிலும் ரீமேக்
சென்னை: தமிழ் சினிமா உலகைப் பொறுத்த வரையில் வெள்ளிக்கிழமை ஆனாலே பதட்டம் தொற்றிக் கொள்ளும்.
காரணம் அன்று வெளியாகும் புதிய படங்களின் வெற்றித் தோல்விகளைக் குறித்தான பயம்தான்.
அப்படி இந்தவாரத்திற்கான புதுவரவாக வெளியாகியுள்ளது "சதுரங்க வேட்டை" திரைப்படம்.

மிளகா நாயகன் நட்ராஜ்:
இப்படத்தில் மிளகா, நாளை போன்ற படங்களில் நடித்த முன்னாள் இந்தி பட உலக ஒளிப்பதிவாளரான நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகி இஷாரா, நட்ராஜ்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனரின் படம்:
சினிமா & பிக்சர் ஹவுஸ் நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளன. அறிமுக இயக்குனரான ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பிரபலங்கள் நடித்துள்ள படம்:
மேலும், இளவரசு, பொன்வண்ணன், பிறைசூடன் போன்ற பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர். கே.ஜி வெங்கடேஷின் ஒளிப்பதிவில், ஷான் ரால்டன் இசை அமைத்துள்ளார்.

இந்தியில் ரீமேக்:
சரி படத்தில் அப்படி என்னதான் இருக்கு திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை இந்தியில் வேறு ரீமேக்க போறாங்களாம் அப்படி என்கிறீர்களா. உங்களுக்காகத்தான் இந்த சுருக்கமான விமர்சனம்.

பணம் எல்லாம் செய்யும்:
பணம்....இந்த மூன்றெழுத்து வார்த்தைதான் முக்கியமான பாத்திரம் இப்படத்தில். பணம் மட்டும் இருந்தால் ஹீரோ, எம்.பி ஏன் பிச்சைக்காரன் கூட ஆகலாம். மொத்தத்தில் பணம் இருந்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம்.

சொர்க்கம் பணத்திலே:
அந்த பணத்தைச் சம்பாதிப்பதற்காக என்னவேண்டுமானலும் செய்பவர்களின் லிஸ்டில் ஒருவர்தான் கதாநாயகன் நட்ராஜ். வாழும்போதே சொர்க்கத்தில் வாழனும். செத்தப்புறம் சொர்க்கத்துக்குப் போய் என்ன பலன் என்று கேட்கும் ஹீரோ எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலைகள் செய்து பணம் சம்பாதிக்கிறார் என்பதுதான் கதை.

புதுமையான திரைக்கதை:
இப்படத்தினை புதுமையான முறையில் ஆறு எபிசோடுகளாக அமைத்துள்ளனர். நம்மையே பிரதிபலிக்கும் சமூகக் கண்ணாடியாக இப்படம் அமைக்கப்பட்டுள்ளது.

சதுரங்க வேட்டை நடக்குமா? :
இப்படத்திற்கு பாடல்கள் வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி. சதுரங்க வேட்டையில் வெட்டப்படும் காய்களாக இல்லாமல், இப்படம் சினிமா வேட்டையில் ஜெயித்தால் நல்லதுதான்.


Click it and Unblock the Notifications











