Sathya Sothanai: மலையாள மூவியா இருந்தா கொண்டாடிருப்பாங்க... சத்திய சோதனை படத்தின் முதல் விமர்சனம்
சென்னை: ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா.
விதார்த், ரவீனா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்திருந்தது.
இந்நிலையில், சுரேஷ் சங்கையாவின் அடுத்தப் படமாக உருவாகியுள்ள சத்திய சோதனை, வரும் 21ம் தேதி வெளியாகிறது.
சத்திய சோதனை வெளியாக இன்னும் இருதினங்கள் உள்ள நிலையில், இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளனர்.

சத்திய சோதனை படத்தின் முதல் விமர்சனம்: 2017ம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இப்படத்தில் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் சங்கையா, தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். பிரேம்ஜி நடிப்பில் அவர் இயக்கியுள்ள சத்திய சோதனை திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது.
மினிமம் பட்ஜெட்டில் உருவாகியுள்ள சத்திய சோதனை படத்தின் ட்ரெய்லர், சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. தனது முதல் படமான 'ஒரு கிடாயின் கருணை மனு' போலவே, 'சத்திய சோதனை' படத்தையும் வித்தியாசமான கதைக்களத்தில் இயக்கியுள்ளதாக பாராட்டுகள் குவிகின்றன. சத்திய சோதனை திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு தினங்களே உள்ளன.
இந்நிலையில் இப்படத்தின் சிறப்புத் திரையிடலில் ஹீரோ பிரேம்ஜி, இயக்குநர் சுரேஷ் சங்கையா ஆகியோருடன் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். அதன்பின்னர் இத்திரைப்படம் குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள பிரபல சினிமா விமர்சகர் கேபிள் சங்கர், சத்திய சோதனை படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

மேலும், "சின்ன ப்ளாட்டை வச்சிட்டு என்னாமா மலையாளத்துல படம் பண்ணுறாங்க? என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த வேளையில் குட் நைட் படம் வந்தது. இப்போது சுரேஷ் சங்கையாவின் சத்திய சோதனை" எனக் குறிப்பிட்டுள்ளார். "ஒரு கொலை, போலீஸ் ஸ்டேஷன். ஒரு அப்பாவி ஹீரோ, ஒரு பாட்டி, நாலு கொலைகாரர்கள் என சப்டிலான ஒரு ப்ளாக் காமெடி. குறிப்பாக நம்ம சுப்ரமணியபுரம் ஸ்பீக்கர் கடைக்காரரும், கூடவே வரும் இன்னொரு கான்ஸ்டபிள் கேரக்டரும் செம்ம" என புகழ்ந்துள்ளார்.
அதேபோல், "அந்த பாட்டி... அத்தனை கேஷுவல். கூடவே ப்ரேம்ஜிக்கு அளவெடுத்தது போல அட்டகாசமான கேரக்டர். தியேட்டரில் கூட்டமாய் பார்த்தால் காமெடி இன்னும் கூட ஒர்க் அவுட் ஆகும்" என பாராட்டியுள்ளார். கேபிள் சங்கரை போலவே மேலும் பல சினிமா விமர்சகர்களும் 'சத்திய சோதனை' படத்தை பாராட்டி வருகின்றனர். இதனால், இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களில், சத்திய சோதனைக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











