For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பயந்த ரஜினி: கவலையில்லை என்று கெத்து காட்டிய சத்யராஜ்

|

சென்னை: புரட்சித் தமிழன் சத்யராஜ் இன்று தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ஆறடி உயரம் ஆஜானுபாகுவான உடலமைப்பு, தைரியமான நக்கல் பேச்சு, பெரியாரின் சிந்தனைச் சிற்பி என பல சிறப்புகளை உள்ளடக்கிய ஒரு நல்ல மனிதர் நடிகர் சத்யராஜ்.

பல எட்டப்பன்களைக் கடந்து கட்டப்பாவாக புகழ்பெற்ற சத்யராஜ் இன்று தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வில்லனாக இருந்து ஹீரோவான நடிகர்களில் மிக முக்கியமானவர் சத்யராஜ்.

மன்னர்

மன்னர்

சத்யராஜ் என்றால், அவர் கோயமுத்தூரில் பிறந்தவர், இயற்பெயர் ரெங்கராஜ் சுப்பையா, இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இவர் பழங்கால மன்னர் பரம்பரையின் வாரிசு என்றால் நம்ப முடிகிறதா? ஆம் சத்யராஜ் பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஈரோடு பகுதியில் வாழ்ந்த காளிங்கராயன் என்ற குறுநில மன்னரின் பரம்பரையைச் சேர்ந்தவர். ஈரோடு பகுதியில் பஞ்சம் ஏற்பட்டபோது பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பனை கட்டி கொடுமுடி வரை 95 கிலோமீட்டருக்கு வாய்க்கால் வெட்டி பாசன வசதி செய்தவர் காளிங்கராய மன்னர். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் வெட்டப்பட்ட அந்த வாய்க்காலைப் பார்த்து வெள்ளையர்களே வியந்து போயினர். அப்படி பல சாதனைகளையும் தியாகங்களையும் செய்த காளிங்கராயன் மன்னரின் 36வது தலைமுறைப் பெண் தான் சத்யராஜின் தாயார் நாதாம்பாள்.

மறுப்பு

மறுப்பு

காளிங்கராயன் மன்னர் பரம்பரையில் பிறந்த சத்யராஜ் அதை அடியோடு மறுத்ததற்கு ஒரு சுவாராஸ்யமான கதை உள்ளது. ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புத் தேடி அலைந்தபோது, நடிகர் சிவக்குமார் தேவர் பிலிம்ஸுக்கு அழைத்துச் சென்றுள்ளார். சத்யராஜைப் பார்த்த சின்னப்ப தேவர், பல்டி அடிக்கத் தெரியுமா எனக் கேட்டாராம். தெரியும் என்று சொல்வதற்கு முன்பு அதைச் செய்து காண்பித்திருக்கிறார் சத்யராஜ். சத்யராஜின் பல்டியைப் பார்த்த சின்னப்பா " நீ நம்ம ஊர்க்காரனா..?" எனக் கேட்டுள்ளார். நான் கோயம்புத்தூர்.. என் தாத்தா பேரு நடராஜ காளிங்கராயர் என்று சொன்னதும், "ஐயோ... ஐயோ... நீயெல்லாம் சினிமாவில் நடிக்க வரலாமா.." என தலையில் அடித்துக் கொண்டாராம். படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது சுதாரித்த சத்யராஜ், இனிமேல் பரம்பரைப் பற்றிப் பேசினால் சினிமா வாய்ப்பு கிடைக்காது என முடிவு செய்து அதை தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார்.

தனி ஸ்டைல்

தனி ஸ்டைல்

சத்யராஜும், ரஜினிகாந்தும் நீண்ட கால நண்பர்கள். அவர்கள் இணைந்து நடித்த மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் ரஜினியை விட கிரேஸான கதாப்பாத்திரம் சத்யராஜுக்குத் தான். அப்படத்தில் சத்யராஜ் இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க முடியாது. ஸ்டைலுக்குப் பெயர் பெற்றவர் ரஜினி என்றால், அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத வில்லனாக சத்யராஜ் கலக்கியிருப்பார். நக்கல் நையாண்டியான நடை உடை பாவனை பேச்சு என சத்யராஜ் புது ஸ்டைலை உருவாக்கியிருந்தார். அவர் வில்லனாக நடித்த அமைதிப்படை திரைப்படம் இன்றளவும் கொண்டாடப்படுவதற்கு திரைக்கதை வசங்களைத் தாண்டி சத்யராஜின் ஸ்டைலும் முக்கியக் காரணம். அப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் தனக்கு மீண்டும் வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசை வந்துள்ளதாக பாராட்டினாராம்.

நட்பு

நட்பு

சத்யராஜின் நண்பரான ரஜினி அவர் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதற்கு ஒரு உதாரணமான நிகழ்வு. குருதனபால் இயக்கிய தாய்மாமன் திரைப்படத்தில் அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிட்டிருப்பார் சத்யராஜ். அப்படம் அதிகமாக பேசப்பட்டதும், சத்யராஜுக்கு போன் செய்து நான் படம் பார்க்கணும் என்றாராம். அதற்கான ஏற்பாடுகள் செய்து ரஜினியை படம் பார்க்க வைத்துள்ளார் சத்யராஜ். படம் பார்த்த ரஜினிகாந்த், " ரொம்ப தைரியம் உங்களுக்கு. இந்த மாதிரி வசனம் பேசும்போது பயம் ஏற்படலையா? என்று கேட்டுள்ளார். நான் தான் எந்த கட்சியிலும் இல்லையே.. அப்புறம் ஏன் பயப்படணும்? எந்த அரசியல்வாதி படத்தைப் பார்த்தாலும் அது கதைக்கு தேவையான வசனம். அதனால அப்படி பேசியிருக்கேன்னு நெனச்சிக்குவாங்க" என பதிலளித்துள்ளார். அதைக் கேட்ட ரஜினி, சத்யராஜின் திரைவாழ்க்கைக்கு ஏதேனும் பாதிப்பு வருமோ என கவலையடைந்திருக்கிறார். அப்போது " கட்சி சாராமல் நான் பேசிய வசனங்கள் என் நடிப்பு வாழ்க்கையை பாதித்தால் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. இதுவரை சம்பாதித்தது போதும் என்ற மனநிறைவுடன் இருந்துவிடுவேன் என்றாராம். பிறகு தோளில் தட்டிக் கொடுத்த ரஜினி அவருக்கு ஓஷோவின் புத்தகத்தைப் பரிசளித்திருக்கிறார்.

கர்லா கட்டை

கர்லா கட்டை

எம்ஜிஆரின் தீவிர ரசிகர் சத்யராஜ் என்பது தெரிந்த விஷயம். சத்யராஜின் அழைப்பை ஏற்று அவரின் தங்கையின் திருமண விழாவில் கலந்து கொண்டு எம்ஜிஆர் வாழ்த்தினார். திருமணம் முடிந்தபிறகு ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் இருக்கும் நேரத்தை அறிந்து கொண்டு சத்யராஜும் அவருடைய மனைவியும் எம்ஜிஆருக்கு நன்றி தெரிவிக்கச் சென்றனர். அப்போது உனக்கு என்ன செய்ய வேண்டும் கேள். என்னால் முடிந்ததை செய்கிறேன் என்றாராம் எம்ஜிஆர். அண்ணா..நான் இப்போது நல்ல வசதியுடன் இருக்கிறேன். அதனால் நீங்கள் உடற்பயிற்சிக்கு பயன்படுத்திய ஏதாவதொன்றை எனக்குக் கொடுத்தால் உங்களின் ஞாபகமாக வைத்துக் கொள்வேன் எனக் கேட்டிருக்கிறார் சத்யராஜ். உடனே அருகில் இருந்த உதவியாளரை அனுப்பி அவர் பயன்படுத்திய கர்லா கட்டை ஒன்றை எடுத்து வரச் சொல்லி கொடுத்தாராம். அத்துடன் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்யவேண்டும் உடல் நல்ல இருந்தால் தான் உழைக்க முடியும். உழைப்பால் உயர்வதே முக்கியம் என்று அறிவுரை சொல்லி வாழ்த்தி அனுப்பியிருக்கிறார் எம்ஜிஆர்.

இயக்குனர்

இயக்குனர்

பல திரைப்படங்களில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் கலக்கியுள்ள சத்யராஜ், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். வில்லாதி வில்லன் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்த சத்யராஜ் "லீ" என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். ஒருமுறை சத்யராஜை மேடையில் ஒருவர் புகழும்போது உயர்ந்த உள்ளம் கொண்டவர் எனக் குறிப்பிட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆமா.. எனக்கு உயர்ந்த உள்ளம் தான். எல்லாருக்கும் உள்ளம் நாலரை அடியில இருக்குன்னா. எனக்கு ஐந்தடிக்கு மேல இருக்கு. ஏன்னா நான் ஆறு அடி உயரம் என்றார். இப்படி தன்னை நோக்கிவரும் புகழ்ச்சியைக் கூட நையாண்டியாகக் கடந்துபோகும் அற்புத மனிதர் சத்யராஜ். நீண்ட ஆயுளோடும் உடல்நலத்தோடும் சிறக்க.. மகா நடிகன் சத்யராஜுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

English summary
Veteran actor Sathyaraj is celebrating his 64th birthday today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more