ரமணா பட பாணியில் மோசடி.. மருத்துவமனையில் இப்படி நடக்குது.. சத்யராஜ் மகள் வேதனை!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், தனியார் மருத்துவமனையில் நடக்கும் மோசடி குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நியூட்ரிஷியனான திவ்யா சத்யராஜின் மகிழ்மதி அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார் நடிகர் சத்யராஜ். ஹீரோ, வில்லன், குணசித்திர வேடம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனக்கு என்று தனி இடம் இவருக்கு உண்டு. நடிகர் சத்யராஜுக்கு சிபி என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். இதில் சிபி சத்யராஜ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கும் சத்யராஜின் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார்.

சத்யராஜின் மகள்: இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனியார் மருத்துவமனையில் நடக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்காக இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறேன். இது என் மருத்துவ நண்பர்கள் சொன்ன தகவல், சில தனியார் மருத்துவமனைகளில் சில மருத்துவமனைக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காக நோயாளிகளுக்கு தேவையில்லாத ரத்த பரிசோதனை, ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கவைக்கிறார்கள். சில நோயாளிகள் குணமானதற்கு பிறகும் இரண்டு நாட்கள் கழித்தே அவர்களை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள். தனியார் மருத்துவமனைக்கு போனால் நோய் குணமாகும் என்பதை விட, பணம் செலவாகும் என்கிற பயம் தான் அதிகமாக இருக்கிறது.
மனிதாபிமானத்தோட இருங்க: எங்கள் அமைப்பு மூலம் சில நோயாளிகளுக்கு நாங்கள் உதவி செய்தாலும், அனைத்து நோயாளிகளுக்கும் உதவி செய்வது என்பது முடியாத விஷயம். நோயாளிகள் வருவாய் உருவாக்கும் எந்திரம் கிடையாது. தனியார் மருத்துவமனை வைத்து இருப்பவர்கள் நோயாளிகளை மனிதாபிமானத்தோட நடத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
அரசியல் என்ட்ரி: அண்மையில் திவ்யா சத்யராஜ் தேர்தலில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கு விளக்கம்கொடுத்த திவ்யா, எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான். நான் பதவிக்காகவோ, தேர்தலில் வெல்வதற்காகவோ அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கவில்லை. மக்களுக்காக வேலை செய்வதற்காகத் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், எந்த ஒரு மதத்தைப் போற்றும் கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம் இல்லை என சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications











