'பிரதி ரோஜு பண்டகே'.. க்யூட் தாத்தாவான சத்யராஜ்.. தெலுங்கு திரையுலகை அசர வைத்த பர்ஸ்ட் லுக்!
பாகுபலிக்கு பிறகு தெலுங்கில் சத்யராஜ் நடித்து வரும் படம் 'பிரதி ரோஜு பண்டகே'. சாய் தரம் தேஜ் தான் இப்படத்தின் ஹீரோ.
சென்னை: சாய் தரம் தேஜ் நடிக்கும் 'பிரதி ரோஜு பண்டகே' எனும் தெலுங்கு படத்தில் தாத்தா வேடத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சத்யராஜ்.
எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாகப் பொருந்தி விடும் திறமை சில நடிகர்களுக்கு மட்டுமே இருக்கும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் சத்யராஜ். வில்லனாகவும் மிரட்டுவார், நாயகனாகவும் மயக்குவார், அப்பாவாக, தாத்தாவாகவும் மனதை உருக்குவார். எப்படிப்பட்ட படமாக இருந்தாலும், அதில் தன் பங்களிப்பை சிறப்பாக தந்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவதில் வல்லவர்.
அவரது கதாபாத்திரங்களிலேயே ராஜமவுலி இயக்கிய பாகுபலியில் இடம் பெற்ற கட்டப்பா கதாபாத்திரம் மிகவும் வலிமையானது. முதல் பாகம் ரிலீசான போது 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' என்ற கேள்வி தான் நாடு முழுவதும் எதிரொலித்தது. அட தேசிய தொலைக்காட்சிகள் எல்லாம் இந்த கேள்வியை முன் வைத்து விவாதமே நடத்துமளவுக்கு டிரெண்டிங்கானது.

தெலுங்கு படங்கள்
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல் இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திர அமைப்பு வலுவானதாக இருந்தது. 'பாகுபலி கட்டப்பா' கேரக்டர் சத்யராஜுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்துள்ளது. தெலுங்கு ரசிகர்களின் இதயங்களை இந்த வயதில் கொள்ளை கொண்டுள்ளார் சத்யராஜ். அதனால் அவருக்கு தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

பாகுபலிக்கு பிறகு
அப்படியாக பாகுபலிக்கு பிறகு தெலுங்கில் சத்யராஜ் நடிக்கும் முக்கியமான படம் பிரதி ரோஜு பண்டகே. சாய் தரம் தேஜ் நடிக்கும் இந்த படத்தை தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் மாருதி இயக்குகிறார். பண்ணி வாசுவுடன் இணைந்து, பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இந்த படத்தை தயாரிக்கிறார். ராஷி கண்ணா, விஜய் குமார், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சத்யம் ராஜேஷ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

மோஷன் போஸ்டர்
பிரதி ரோஜு பண்டகே படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்போஸ்டரில் ஒரு மழை வேளையில் சத்யராஜும், தேஜும் குடைப்பிடித்தபடி செல்கின்றனர். சத்யராஜ் குடையை நீக்கிவிட்டு மழையில் நனைந்தபடி குழந்தையாக துள்ளி குதிக்கிறார். ரசிகர்களிடையே இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சத்யராஜின் கேரக்டர்
பிரதி ரோஜு பண்டகே படத்தில் சத்யராஜுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவரது கேரக்டரை வடிவமைத்துள்ளார் இயக்குனர் மாருதி. பலே பலே மகாதிவோய், மஹாணுபவது போன்ற குடும்பப்படங்களை இயக்கியவர் மாருதி. அந்த வரிசையில் இதுவும் ஒரு குடும்பப் படம் தான் என்பதை இந்த போஸ்டரே உறுதி செய்கிறது.

விக்ரமன் படம் மாதிரி
பிரதி ரோஜூ பண்டகே என்றால் தினந்தினம் பண்டிகை என்று தமிழில் அர்த்தம். தலைப்பைப் பார்க்கும் போதே தமிழில் விக்ரமன் படம் போல, இப்படமும் செண்டிமெண்ட் மயமாக இருக்கும் என்பது நன்றாகத் தெரிகிறது. மாருதியின் முந்தைய படங்களும் குடும்ப படங்கள் தான் என்பதால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

தாத்தா - பேரன் பாசம்
தமிழில் விமல், ராஜ்கிரண் நடித்த 'மஞ்சப்பை' படம் போல் தாத்தா, பேரன் இடையேயான உறவை பற்றி பேசும் படமாக பிரதி ரோஜு பண்டகே உருவாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. வரும் டிசம்பர் மாதம் படம் ரிலீசாக உள்ளது. நிச்சயம் இப்படமும் சத்யராஜுக்கு தெலுங்கில் நல்ல பெயரை உருவாக்கி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











