அதை மட்டும் சொன்னால்.. விஜய்யை கொத்து பரோட்டா போட்டுடுவாங்க.. பெரம்பூரில் விளாசித் தள்ளும் சத்யராஜ்
சென்னை: நடிகர் சத்யராஜ் அடிப்படையில் பெரியார் ஆர்வலர், என்பதால் தேர்தல் நேரங்களில் அவர் திமுகவை ஆதரிப்பது கடந்த சில தேர்தல்களில் தொடர்ந்து பார்க்க முடிகிறது. இப்படி இருக்கையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அவர் திமுகவுக்கு ஆதரவாகவே பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுகிற, பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரை, ஆதரித்து பிரச்சாரம் செய்கையில், நடிகர் விஜய் மிகக் கடுமையாக சாடி விமர்சித்து பிரச்சாரம் செய்தார்.
அவர் பேசுகையில், " விஜய் அரசியலுக்கு வந்து பெரியாரையும் அம்பேத்கரின் கொள்கை தலைவர்கள் என்று கூறியதும் நான் மகிழ்ச்சி அடைந்தேன் விஜய் மூலம் பெரியாரும் அம்பேத்கரும் சமகால இளைஞர்கள் மத்தியில் பேசு பொருளாக மாற உள்ளார்கள் என்று மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் ஒரு முறை விஜய் மேடையில் பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை, 'ஸ்டாலின் அங்கிள்' என்று கூறியதும் எனக்கு பகீர் என்று ஆகிவிட்டது.

கொத்து பரோட்டா: மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொள்பவரை இப்படியா விமர்சிப்பது. விஜய், தனது தலைவா படத்தின் ரிலீஸ் பிரச்சினையின், போது அப்போதைய முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா முன் சென்று அம்மா அம்மா எங்கள் படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்யுங்கள் அம்மா என்று கெஞ்சிக் கேட்டார். அதற்கு பதிலாக, அதாவது ஜெயலலிதா அம்மா என்பதற்கு பதிலாக, ஜெயலலிதா ஆன்ட்டி என்று அவர் சொல்லி இருந்தால், என்னவாக இருக்கும் இன்றைக்கு? கொத்து பரோட்டா போடுகிறார்கள் அல்லவா அது போல் அவரை கொத்து பரோட்டா போட்டு இருப்பார்கள் அதிமுகவினர். இப்போது மேடையில் பாடுகிறார் அல்லவா, நான் ரெடி தான் வரவா என்றெல்லாம் பாடி இருக்க முடியாது, அவருடைய படத்துல இடம்பெற்ற தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா பாடல் தான் சரியாக இருந்திருக்கும்.

கெட்டவார்த்தை: யாராவது விஜய்யை ஏதாவது விமர்சித்தால் கூட அவர்களை, சென்னை கெட்ட வார்த்தை, கோயம்புத்தூர் கெட்ட வார்த்தை, மதுரை கெட்ட வார்த்தை, வடநாட்டு கெட்ட வார்த்தை என எல்லா மொழிகளிலும் இருக்கக்கூடிய கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்கள். நான் சமூக வலைதளங்களில் இல்லை ஆனாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. நான் பெரியாரை தலைவனாக ஏற்றுக் கொண்டவன் என்று பேசியுள்ளார். சத்யராஜின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications