இது சத்யராஜின் 5வது மொட்டை...
சென்னை: தெலுங்கு படத்துக்காக நடிகர் சத்யராஜ் தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டுள்ளார்.
சத்யராஜ் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ். இவர் வில்லன் நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையைத் துவங்கி, பின் கதாநாயகன் நடிகராக மாறி நடித்து வருகிறார். எம்.ஜீ.ஆரின் தீவிர ரசிகன்.
வேதம் புதிது, வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை, பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு என இவர் நடித்து வெற்றிப்பெற்ற படங்களின் பட்டியல் நீள்கிறது.
நடிப்பிற்காக எத்தகைய பரிணாமத்தையும் தர தயாராக இருக்கும் நடிகர்களில் சத்யராஜும் ஒருவர் என்றால் மிகையில்லை.

முதலாம் மொட்டை...
சத்யராஜ், ‘100-வது நாள்' படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்தார். அந்த படத்தில் நடிப்பதற்காக, முதன்முதலாக அவர் மொட்டை போட்டுக்கொண்டார். படம் 100 நாட்களை தாண்டி ஓடி சாதனை புரிந்தது.

இரண்டாம் மொட்டை...
அதன்பிறகு, ‘ஜல்லிக்கட்டு' படத்துக்காக அவர் மொட்டை போட்டார்.

மூன்றாம் மொட்டை....
‘அமைதிப்படை' படத்துக்காக மூன்றாவது முறையாக மொட்டை போட்டார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் தந்தை, மகனாக கலக்கினார்.

நான்காம் மொட்டை...
பின்னர், ‘மாறன்' என்ற படத்துக்காக நான்காவது முறையாக மொட்டை போட்டுக் கொண்டார். மகனுக்கு இறுதி காரியம் செய்வதற்காக படத்தில் மொட்டை தெவைப்பட்டது. பின் வில்லன்களை பலி வாங்கும் வில்லாதி வில்லனாக அசத்தினார்.

தெலுங்கிலும் வெற்றிமுகம்...
இப்போது அவர் தமிழ் படங்களுடன், தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அவர் நடித்த 2 தெலுங்கு படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.

பிரபாஸின் பிரமாண்ட படம்...
பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பாகுபலி' என்ற புதிய தெலுங்கு படத்தில், சத்யராஜ் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இது, சரித்திர படம். ரூ.150 கோடி செலவில் தயாராகிறது.

5–வது மொட்டை...
இந்த படத்தில் ஒரு மன்னனின் தளபதியாக, ‘கப்பா' என்ற பாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இதற்காக அவர் மொட்டை போட்டு இருக்கிறார். படத்துக்காக அவர் மொட்டை போட்டுக் கொண்டது, இது 5-வது முறை.

சண்டைப்பயிற்சி...
படத்தில் அவர் குதிரை சவாரி செய்வது போலவும், வாள் சண்டை போடுவது போலவும் காட்சிகள் வருகின்றன. இதற்காக அவர் தினமும் குதிரை சவாரி பழகி வருகிறார். வாள் சண்டை பயிற்சியும் பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications











