69 வயதில் கட்டப்பாவுக்கு கட்டம் சரியா இருக்கு போல.. ரஜினிகாந்த், சல்மான் கானுக்கே வில்லனாகிட்டாரே!
சென்னை: 69 வயது ஆகும் நடிகர் சத்யராஜுக்கு தொடர்ந்து ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் மீனாட்சி சவுத்ரியின் அப்பாவாகவும் நடித்திருப்பார். அடுத்ததாக விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தில் மெயின் வில்லனாக சத்யராஜ் கமிட்டாகி உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும், சல்மான் கானின் புதிய படத்திலும் சத்யராஜ் தான் வில்லன் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்த கேள்விக்கு சத்யராஜ் அளித்த பதிலை இங்கே பார்க்கலாம் வாங்க..
மோடி பயோபிக்: பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கிறாரா? என்கிற கேள்விக்கு இல்லை என உடனடியாக மறுத்து விட்ட சத்யராஜ், சல்மான் கான் படம் குறித்த கேள்விக்கு மட்டும் மழுப்பலான பதிலையே கூறியுள்ளார். மோடி பயோபிக்கில் நடிக்க தயார் எனக் கூறிய அவர், அதை வெற்றிமாறன், பா. ரஞ்சித் அல்லது மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் இயக்கினால் நன்றாக இருக்கும் என செம ட்விஸ்ட் வைக்க அரங்கமே அதிர்ந்தது.
மீண்டும் ரஜினியுடன்: மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிக்கு வில்லனாக "என்னம்மா கண்ணு சௌக்கியமா" என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சத்யராஜ். அந்த படத்துக்கு பிறகு பல ஆண்டுகளாக இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தில் மெயின் வில்லனாக சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் ஆன் போர்டு ஆகிவிட்டேன் என அதிகாரப்பூர்வமாக சத்யராஜ் கூறியுள்ளார்.
சல்மான் கானுக்கு வில்லன்: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் சிக்கந்தர் படத்தில் சத்யராஜ் தான் மெயின் வில்லன் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அது தொடர்பான கேள்விக்கு, கார்ப்பரேட் கம்பெனி அக்ரிமெண்ட் போடும் போதே அது பற்றி கூறக்கூடாது என சொல்லி விடுகின்றனர். அதை மீறி சொன்னால் என் மீது தேவையில்லாமல் வழக்கு தொடருவார்கள் என்றார். நடிக்கவில்லை என்றால் இதுபற்றி ஏன் பேச போகிறார் சத்யராஜ் என விழா மேடையிலேயே ஒருவர் கூற சத்யராஜ் அந்த படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.
ஷாருக்கான் படத்தில்: ஏற்கனவே ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோன் தந்தையாக சத்யராஜ் நடித்து தூள் கிளப்பி இருப்பார். இந்நிலையில், சல்மான் கான் படத்திலும் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது உறுதியாகி உள்ளது. அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு சிக்கந்தர் படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications