Rajinikanth: விஜய்க்கு எதிராக சூப்பர் ஸ்டார்? ரஜினியைச் சந்தித்த சீமான்.. துரைமுருகன் அரசியல் போஸ்ட்
சென்னை: விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியல் களத்தில் களமிறங்கப்போவதாக அறிவித்த பின்னர், விஜய் குறித்து பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்பில் அரவணைத்து பேசிவந்த அரசியல் தலைவர்களில் ஒருவர் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான். மற்ற அரசியல் கட்சியினர் பலரும் விஜய் குறித்து எதாவது விமர்சனங்களை முன்வைத்து வந்தாலும், சீமான் மட்டும் விமர்சங்களை முன்வைக்காமல் இருந்தார். விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்குப் பின்னர் விஜய்யை அதிகம் விமர்சித்த கட்சியாகவும் அரசியல் தலைவராகவும் சீமானும் நாம் தமிழரும் உருமாறியுள்ளது. இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தினை சீமான் சந்தித்துள்ளது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
கோலிவுட்டில் இருந்து அரசியல் களத்திற்குச் செல்வதற்கு நடிகர்கள் பெரிய சவாலையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்று இல்லை. இன்னும் சொல்லப்போனால், கோலிவுட்டுக்கு அடுத்த ஸ்டாப் தமிழ்நாடு அரசியல் என்ற சூழல் இங்கு உருவாகி பல தசாப்தங்கள் ஆகின்றது. இதில் அரசியலில் கரை சேர்ந்தவர்கள் உள்ளனர். அதில் மூழ்கி காணாமல் போனவர்களும் உள்ளனர். இப்படியான நிலையில் கோலிவுட்டில் இருந்து கடைசியாக தமிழ்நாடு அரசியல் களத்திற்கு வந்து சேர்ந்துள்ளவர் விஜய்.

விஜய் சினிமா உலகில் இருக்கும்போதே, சினிமா உலகிலும், அரசியல் தளத்திலும் கூடுமானவரை எதிரிகளை உருவாக்கிக் கொண்டார் என்றும் கூறலாம், விஜய்க்கு எதிரிகள் பட்டியலில் சிலர் தாங்களாகவே இணைந்து கொண்டார்கள் என்றும் கூறலாம். அப்படி சினிமா உலகில் விஜய்க்கு நேரடி போட்டியாளராக விஜய்யும் விஜய் ரசிகர்களும் கருதிக் கொண்ட நபர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இது தொடர்பாக விஜய்யின் மேடைப்பேச்சுகளை சாட்சியங்களாகக் கூறலாம். இதனால் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இணையத்தில் போரே நடந்துள்ளது எனலாம். இந்தச் சண்டையை ஊக்குவிக்கும் விதமாகத்தான் விஜய்யின் நடவடிக்கைகளும் இருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை அப்படியானவராக காட்டிக் கொள்ளவே இல்லை.
சீமான்: விஜய் அரசியல் களத்திற்கு வந்த பின்னர், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டினை வெற்றிகரமாகவே நடத்தி முடித்தார் என்றுதான் கூறவேண்டும். இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு ஆளும் அரசுகளை விமர்சிக்கும் விதமாக இருந்தது. இதுமட்டும் இல்லாமல், அவர் பேசிய சில வார்த்தைகள் சீமானைக் குறிப்பிடுவதாக பலரும் கூறினார்கள். மேலும் தனது அரசியல் கன்னிப்பேச்சில் பல அரசியல் இயக்கங்களை விமர்சித்துப் பேசினார்.

தவெக: மாநாட்டுக்கு முன்பு வரை விஜய்யை அரவணைத்துப் பேசிவந்த சீமான், மாநாட்டிற்குப் பின்னர் விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சித்தார். இன்னும் சொல்லப்போனால் அவரது விமர்சனங்களில் ' லாரி அடித்துச் செத்துப்போவ தம்பி' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இது விஜய் ரசிகர்களை மட்டும் இல்லாமல், தவெகவினர் மத்தியிலும் பெரும் கோபத்தை உண்டாக்கியது. மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
அரசியல் கணக்கு: இப்படியான நிலையில் விஜய்க்கு சினிமா களத்தில் போட்டியாளராக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தினைச் சந்தித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் சீமான். இதனை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும், அரசியல் களத்தில் இந்தச் சந்திப்பு புகைச்சலைக் கூட்டியுள்ளது. இப்படியான நிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் தனது எக்ஸ் தளத்தில், புலி மற்றும் கழுகு இணைந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். இதனைப் பலரும் புலி என சீமானையும் கழுகு என ரஜினிகாந்த்தையும் குறிப்பிடுகின்றார் எனக் கூறுகின்றனர். இது விஜய்க்கு எதிராக ரஜினி ரசிகர்களை தனது பக்கம் இழுக்க சீமான் செய்வதாக விமர்சனங்கள் எழுகின்றன.



Click it and Unblock the Notifications











