Satyaraj about Mano bala: மனோ பாலா இயக்கத்துல ரெண்டு படம் நடிச்சிருக்கேன்.. சத்யராஜ் வேதனை!
சென்னை: தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மனோ பாலாவுக்கு பிரபலங்கள் இரங்கல்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, ரஜினிகாந்த், கார்த்தி, சார்லி, மனோஜ், பாரதிராஜா, காளி வெங்கட், இளையராஜா, இயக்குநர் எச். வினோத் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கல் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
மனோபாலா தயாரிப்பில் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எச். வினோத் சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மனோ பாலாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.
சத்யராஜ் வேதனை: இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் வீடியோ மூலம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ள நிலையில், தற்போது நடிகர் சத்யராஜும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய நடிகர் சத்யராஜ், மனோபாலா நானெல்லாம் சினிமாவில் ஒரே காலக்கடத்தில் தான் வந்தோம். அவர் போல இன்னொரு மனிதரை காண்பது கஷ்டம். என் அன்பு நண்பரும், இயக்குநரும் நடிகருமான மனோபாலாவின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் இயக்கத்தில் பிள்ளை நிலா, மல்லுவேட்டி மைனர் என இரண்டு படங்களில் நடித்துள்ளேன். என்ன சொல்றதுன்னே தெரியல.. அவர் ஒரு நல்ல மனிதர். நல்ல கலைஞர். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை கூறிக் கொள்கிறேன் என நடிகர் சத்யராஜ் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இரண்டு படங்கள்: 1985ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு ரிலீசாக வெளியான பிள்ளை நிலா படத்தில் மோகன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தில் செயின்ட் குரோமியோ எனும் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருந்தார்.
1990ம் ஆண்டு மனோபாலா இயக்கத்தில் வெளியான மல்லுவேட்டி மைனர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் சத்யராஜ். இளையராஜா இசையில் உருவான அந்த படத்தில் சீதா மற்றும் ஷோபனா என இரு ஹீரோயின்கள் அந்த படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











