வாலி படத்தின் ரீமேக்கிற்கு தடை கோரிய வழக்கு... எஸ்ஜே சூர்யா மனு தள்ளுபடி
டெல்லி : நடிகரும் பிரபல இயக்குநருமான எஸ்ஜே சூர்யா, அஜித், சிம்ரன் நடிப்பில் வாலி என்ற படத்தை இயக்கினார். சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இந்தி உரிமையை போனி கபூர் பெற்றுள்ள நிலையில், இதை எதிர்த்து எஸ்ஜே சூர்யா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதன் இடைக்கால தீர்ப்பு அவருக்கு சாதகமாக இல்லாத நிலையில் உச்சநீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தார்.

அஜித்தின் வாலி படம்
கடந்த 1999ம் ஆண்டில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் வெளியான படம் வாலி. இந்தப் படம் மிகவும் இளமையாக, இளம் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரும்வகையில் அமைந்தது. மிகவும் யூத்புல்லாக இருந்த இதன் திரைக்கதை இதன் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.

இந்தி ரீமேக் ரைட்ஸ்
தலைப்பிற்கு ஏற்றாற்போல தம்பியின் மனைவிமீது கண்வைக்கும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளதை அப்போது ஹீரோவும் நானே வில்லனும் நானே பாணியில் அவர் செய்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் ரைட்டை தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றிருந்தார்.

எஸ்ஜே சூர்யா வழக்கு
ஆனால் வாலியின் இந்தி பதிப்பை இயக்க திட்டமிட்டிருந்த எஸ்ஜே சூர்யா, இந்தப் படத்தின் கதை, திரைக்கதை அதை எழுதியவருக்கே சொந்தம் என்ற அடிப்படையில் இதை இந்தியில் ரீமேக் செய்ய போனிகபூருக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ஆனால் கதை அதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணங்களையும் எஸ்ஜே சூர்யா வழங்கவில்லை என்றும் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம் என்றும் கூறி கடந்த 2021ல் உயர்நீதிமன்றம் போனிகபூர் இந்தி ரீமேக்கை துவங்க இடைக்கால அனுமதி வழங்கியது.

உச்சநீதிமன்றம் தள்ளுபடி
இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து எஸ்ஜே சூர்யா உச்சநீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்ஆர் ஷா முன்னிலையில் விசாரிக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற விசாரணையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றுக்கூறி எஸ்ஜே சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











