Maamannan - என்னடா இது மாமன்னனுக்கு வந்த சோதனை.. மாரி செல்வராஜுக்கு ட்விஸ்ட் வைத்த ரசிகர்கள்
சென்னை: Maamannan (மாமன்ன) மாமன்னன் படத்தின் காட்சிகள் எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டுவரும் சூழலில் மாரி செல்வராஜுக்கு ரசிகர்கள் ட்விஸ்ட் வைத்துவிட்டதாக பலர் கூறுகின்றனர்.
ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பின்பு பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கி கவனம் பெற்றவர் மாரி செல்வராஜ். அடிப்படையில் எழுத்தாளர் என்பதாலும், சிறு வயதில் பல துன்பங்களை சந்தித்ததாலும் இவரது ஒவ்வொரு படைப்பும் காத்திரமாக இருக்கும். குறிப்பாக பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றாக இடம்பெற்றுவிட்டது.

மாமன்னன்: பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தொடர்ந்து வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கினார் மாரி. கடந்த ஜூன் 29ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. இதுவரை தமிழ் சினிமா பேசாத கதைக்களத்தை எடுத்துக்கொண்டு தனக்கேயுரிய பாணியில் பேசியிருந்தார் மாரி செல்வராஜ்.
மாஸ் ஹிட்: படத்துக்கு விமர்சன ரீதியாக ரசிகர்கள் பக்கா வரவேற்பு கொடுத்தனர். அதேபோல் வசூலிலும் 50 கோடி ரூபாயை கடந்தது. உதயநிதி ஸ்டாலின் இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் இவ்வளவு வசூலித்திருக்கிறது. அதுவும் தனது கடைசி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படி வரவேற்பை பெற்றதால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் உதய். இதனால் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் ஒன்றையும் பரிசாக கொடுத்தார்.
ஃபஹத் பாசில்: படத்தின் இரண்டு தூண்களாக இருந்த வடிவேலுவும், ஃபஹத் பாசிலும். மாமன்னன் கதாபாத்திரத்தில் ஒடுக்கப்பட்டவராக வடிவேலு ஸ்கோர் செய்ய, மறுபக்கம் ரத்னவேலு என்ற கதாபாத்திரத்தில் சாதி வெறி பிடித்தவராக ஃபஹத் பாசில் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிட்டார். அதிலும் ஃபஹத் பாசில் தனது கண்களால் நடித்து அனைவரிடமும் பாராட்டையும், ரத்னவேலு என்ற கதாபாத்திரத்தின் மீது பலருக்கும் வெறுப்பை விதைத்தார். அந்த வெறுப்புதான் அக்கதாபாத்திரத்தின் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விஸ்ட் வைத்த ரசிகர்கள்: இந்நிலையில் மாமன்னன் படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை போலவே ஓடிடியிலும் மாமன்னனுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் ஒரு ட்விஸ்ட்டோடு. ஆம், திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருந்தபோது வடிவேலு ஏற்றிருந்த கதாபாத்திரத்தை அனைவரும் சிலாகித்து பகிர்ந்துவந்தனர்.
ஆனால் ஓடிடியில் வெளியான பிறகு ஃபஹத் பாசில் ஏற்றிருந்த ரத்னவேலு கதாபாத்திரம் தொடர்பான காட்சிகளை எடிட் செய்து அதில் தாஜ்மஹால் படத்தில் இடம்பெற்ற திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா போன்ற பல பாடல்களை எடிட் செய்து பகிர்கின்றனர். அதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன. அதேசமயம் சாதி திமிர் உள்ளவராக இருக்கும் ரத்னவேலுவை இப்படி கொண்டாடுவது வேண்டாத வேலை. படம் பேச வந்த கருத்தையே இது மழுங்கடிக்கிறது என பலர் கூறி அந்த வீடியோக்களை ட்ரோல் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











