Screen Doctor: இதையெல்லாம் கொஞ்சம் கவனித்திருந்தால் கேம் சேஞ்சர் படமும் பிளாக்பஸ்டர் ஆகியிருக்கும்!
சென்னை: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எனக் கொண்டாடப்படும் இயக்குநர் ஷங்கர் பல வருடங்களுக்கு முன்பே பான் இந்தியா படங்களை எப்படி இயக்க வேண்டும் என்றும் பெரிய பட்ஜெட் படங்களை எப்படி கையாள வேண்டும் என ராஜமெளலி உள்ளிட்ட பல இயக்குநர்களுக்கும் பாதை போட்டுக் கொடுத்து பாடமாக இருந்தவர்.
ஆனால், சமீப காலமாக அவர் இயக்கும் படங்கள் ரசிகர்களை பெரிதாக வசீகரிக்க தவறுகின்றன. அதன் காரணமாக பெரிய பட்ஜெட் என்பதால் பாக்ஸ் ஆபீஸ் தோல்விகளையும் அவர் சந்தித்து வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களே அவர் இயக்கத்தில் நடிக்க தயக்கம் காட்டி வந்த நிலையில் தான் டோலிவுட்டுக்கு சென்று ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கினார்.

முதல்வன் படத்தை போல முத்திரை பதிக்கும் படமாக கேம் சேஞ்சர் அமையும் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ராம்சரணின் உழைப்பும், அவர் ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் சேர்த்து வைத்திருந்த மாஸையும் இழக்க வைத்து விட்டது.
சூப்பரான கதை தான்: அப்பா ராம்சரணை ஏமாற்றி திக்குவாயான அவருக்கு குரலாக நியமிக்கப்பட்ட ஸ்ரீகாந்த் எப்படி கூடவே இருந்து குழி பறித்து ஆந்திராவின் முதல்வர் ஆகிறார் என்பதும் அவருக்குப் பிறகு அவருடைய வளர்ப்பு வாரிசுகளான ஜெயராம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நாற்காலிக்காக சண்டை போட, எஸ்.ஜே. சூர்யா தனது வில்லத்தனத்தால் நாற்காலியை பிடிக்க நினைக்க, கலெக்டராக இருந்து தேர்தல் அதிகாரியாக மாறும் ராம் சரண் அதை தடுத்து எப்படி சிஎம் ஆனார் என்பது தான் கேம் சேஞ்சர் படத்தின் கதை. கார்த்திக் சுப்புராஜ் சொன்ன ஒன்லைன் மற்றும் அதை கதையாக மாற்றிய இடங்களில் எல்லாம் பெரிதாக எங்கேயும் தவறு நடக்கவே இல்லை.
திரைக்கதை சொதப்பியது ஏன்?: கேம் சேஞ்சர் திரைப்படத்தை பிளாக்பஸ்டர் படமாக மாற்ற விடாமல் தடுத்ததே திரைக்கதை தான். மேலும், இந்தியன் 2 படத்தின் தோல்வியும் படத்தை அதிகளவில் பாதிப்படைய செய்துவிட்டது. பெரிய கதை என்பதால் இயக்குநர் ஷங்கர் சரியான திட்டமிடல் இல்லாமல், 2.30 மணி நேரத்துக்கு தேவையான காட்சிகளை ஸ்டோரி பேப்பரிலேயே எடிட் செய்யாமல், படமாக எடுத்துவிட்டு எடிட் செய்ய முனைந்த இடத்தில் தான் மிகப்பெரிய மிஸ்டேக் நடந்துள்ளது தெரிகிறது. அதை அவரும் பேட்டி ஒன்றில் ஒத்துக்கொண்டிருக்கிறார்.

அம்மா சென்டிமெண்ட் முக்கியம்: முதல்வன் படத்தில் அம்மா, அப்பா இருவரும் பாம் பிளாஸ்ட்டில் கிளைமேக்ஸுக்கு முன்பாக இறக்கும் காட்சி ரசிகர்களை பதை பதைப்பில் ஆழ்த்தியிருக்கும். அதே பாணியை கடை பிடிக்கிறேன் என்கிற பெயரில் இங்கே ஆரம்பத்திலேயே அப்பாவை போட்டுத் தள்ளிவிட்டு, கடைசியில், வயதான அம்மாவையும் இறக்க விட்டு இருப்பார்கள். ஆனால், அது தியாகமாக பார்க்கப்படாமல், ஹீரோவின் கையாளாகாத தனத்தையே காட்டிய நிலையில், ரசிகர்கள் அந்த சீனை பெரிதாக கொண்டாடவில்லை. அதுவும் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. அந்த இடத்தில் ஒரு சரியான ஸ்க்ரீன் பிளே அமைந்திருந்தால் கூட கடைசியில் படம் தப்பித்து இருக்கும்.
பாடல்களுக்கான செலவுகளை குறைத்திருக்கலாம்: தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு பெரிய சுமையை ஷங்கர் கொடுத்ததே வழக்கம் போல பாடல்களுக்கு பிரம்மாண்டமாக செலவு செய்கிறேன் என ஒரு ஊரையே செட் போட்டு கலர் கலர் பெயிண்ட் அடித்து வீணாக்கியது தான். அண்டங்காக்கா கொண்டக்காரி, பல்லேலக்கா பாடல்களுக்குப் பிறகு ஷங்கரிடம் இருந்து இதுபோன்ற விஷயங்களை ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பதே கிடையாது என்பதை அவர் புரிந்துக் கொள்ள வேண்டும். வேள்பாரி படத்தை நிச்சயம் அவர் நினைத்ததை போலவே பிரம்மாண்டமாக கொடுத்து மீண்டும் பேரை கேட்டாலே சும்மா அதிருதான்னு ஷங்கர் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பேராசை.


Click it and Unblock the Notifications











