Armstrong Death: ஜெய் பீம் சொல்லி ஆம்ஸ்ட்ராங்கிடம் நெருங்கிய கொலையாளிகள்? தமிழ் பிரபா வேதனை பதிவு
சென்னை: கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் தலைநகர் சென்னையில் அவரது வீட்டுக்கு அருகே வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக காவல்துறை 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று அதாவது ஜூலை 7ஆம் தேதி அவரது உடல் இறுதி அடக்கம் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட சினிமா பிரபலங்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக இயக்குநர் பா. ரஞ்சித், வெற்றி மாறன், திரைக்கதை ஆசிரியர் தமிழ் பிரபா, நடிகர்கள் தீனா, கூல் சுரேஷ், பிக்பாஸ் பிரபலம் இசைவாணி பல்வேறு உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் எழுத்தாளரும் சார்பட்டா பரம்பரை, ப்ளூ ஸ்டார், தங்கலான் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியவரும் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவருமான தமிழ் பிரபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குறித்து மிகவும் வேதனையாக பதிவிட்டுள்ளார். அதில், "உன்னை சந்தித்துவிட்டு கிளம்பும்போது, "ம்மா.. இப்டியொரு சட்டை எனக்கு வாங்கிக் குடேம்மா" என்றாய். "உடம்பைக் குறைச்சுட்டு இதையே எடுத்துகோண்ணா" என்றதும், என் கன்னத்தைப் பிடித்து கிள்ளிச் சிரித்தாய். அந்த சிரிப்புடன்தான் அண்ணா உன்னை கடைசியாகப் பார்த்தது. நீ கேட்ட அந்த சட்டையைத்தான் உன் இறுதி ஊர்வலத்திற்கு போட்டு வந்தேன். அந்த சிரிப்போ, கிள்ளலோ இல்லாமல் மீளாஉறக்கத்தில் இருந்தாய் நீ. இனி அந்த சிரிப்பை எப்போது காண்பேன்.

பைக்கில் வந்த ஸ்விகி ட்ரஸ் போட்டவன் உன்னை தன்னிடம் வரவழைக்க "ஜெய்பீம்ணா" என சொன்னதும் அவனருகே நீ சென்றபோதுதான் அவன் கத்தியை எடுத்திருக்கிறான் என இரங்கல் கூட்டத்தில் யாரோ சொல்லி கேட்டபோதுதான் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. எத்தனை நம்பிக்கையுடனும் பிரியத்துடனும் நீ அவனருகே சென்றிருப்பாய். பண்பாட்டு ரீதியாக பௌத்தத்தையும் அரசியல் ரீதியாக அம்பேத்கரையும் பயின்று தலித்துகள் மேலெழும்ப வேண்டுமென வடசென்னையில் தொடர்செயற்பாடுகளை நீ நிகழ்த்தினாய். ரௌடிகளாக பிம்பப்படுத்தப்பட்ட அடையாளங்களை வழக்கறிஞர்களாக மாற்றினாய்.

குடும்பம் குடும்பமாக: பிற மாவட்டங்களில் போல அல்லது சென்னையில் தலித்துகளின் மீது வன்முறை நிகழாமல், அவ்வாறே நிகழ்ந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு பெரும் அரணாக கருப்பர் நகரத்துக் களிராய் இருந்தாய். எத்தனை பேரின் பிள்ளைகளை படிக்க வைத்தாய், பணியிலமர்த்தினாய் அந்த நன்றியைத்தான் கண்ணீராக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட குடும்பம் குடும்பமாக வந்து உனக்கு அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்கள் என்பதை உன்னை ரௌடியாக கட்டப்பஞ்சாயத்து ஆளாக கட்டமைக்கும் வெறுப்பாளர்கள் அறிவார்களா?

வன்முறை: கொடூரமான கொலை, புதைப்பதற்கு நீதிமன்றம் காட்டிய அலைக்கழிப்பு, இறுதியில் அனுமதி மறுப்பு, அரசின் கள்ள மௌனம் என மேலும் மேலும் கொதிநிலை அடைந்து வன்முறையை நிகழ்த்துவதற்கு அத்தனை சாத்தியங்களும் உன்னைச் சுற்றி திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்கு இருந்த போதும் அதை யாரும் செய்யாமல் இருந்ததற்கு காரணம் நீ கற்றுக்கொடுத்த ஒழுக்கம்தான்.

மெட்ராஸ் படம்: இந்த மூன்று நாட்களும் மருத்துவமனையிலும், இறுதி ஊர்வலத்திலும் எந்த ஒரு வன்முறையும் நிகழாமல் நீ அடக்கம் செய்யப்பட்டாய். ஒரு தலைவன் தன் மக்களை எப்படி வழிநடத்தியிருக்கிறான் என இந்த மாநிலம் அறிந்து கொள்வதற்கு நீ உன் உயிரையே விலையாகக் கொடுத்திருக்கிறாய் அண்ணா. "ஒரு கூட்டத்தோட தலைவன தூக்கிட்டா இனி எல்லோரும் சிதறிப்போயிடுவானுங்க. இப்போ செய்" என மெட்ராஸ் படத்தில் வில்லன் பேசும் வசனம் வரும். ஆனால் கூட்டம் சிதறவில்லை முன்பெப்போதும் விட தீவிரமாக ஒன்றிணையும் காலமும், தேவையும் உருவாகியிருப்பதாகவே பார்க்கிறேன்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பலரும் தமிழ் பிரபாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











