தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல.. அவங்க தான் ஏதோ பண்ணிட்டாங்க.. டான்சர் ரமேஷின் முதல் மனைவி கண்ணீர்!
சென்னை : டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரின் முதல் மனைவி அவர் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார். டான்ஸர் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.
டிக்டாக், இன்ஸ்டாகிராமில் மைக்கேல் ஜாக்சன் போல டான்ஸ் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் ரமேஷ். இவரின் ஸ்டைலான டான்ஸ் வீடியோவிற்கு இணையத்தில் ஏகப்பட்ட கிராக்கி இருந்தது.
இதன் மூலம் பிரபலமான டான்ஸர் ரமேஷ் தொலைக்காட்சி டான்ஸ் ஷோவில் கலந்து கொண்டார்.அதே போல, சமீபத்தில் வெளியான துணிவு படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்துள்ளார்.

டான்ஸர் ரமேஷ்
நடனத்தின் மீது இருந்த ஆர்வத்தால், தெருக்களில் ஆடிவந்த டான்ஸர் ரமேஷுக்கு சினிமாவில் ஓர் அங்கிகாரம் கிடைத்து வரும் நேரத்தில் அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த டான்சர் ரமேஷுக்கு சித்ரா மற்றும் இன்பவள்ளி என இரண்டு மனைவிகள் உள்ளனர்.

இரண்டு மனைவிகள்
இவரது இரண்டாவது மனைவி இன்பவள்ளி சென்னை புளியந்தோப்பில் உள்ள கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். நேற்று ரமேஷுக்கு பிறந்தநாள் என்பதால், இரண்டாவது மனைவியிடம், நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க, பணம் கேட்டதாவும், இன்பவள்ளி பணம் தரமறுத்ததால், விரக்தியடைந்த ரமேஷ் வீட்டின் 10வது மாடிக்கு சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை செய்துகொண்டார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, இரண்டாவது மனைவி இன்பவள்ளியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

தற்கொலை இல்லை கொலை
இந்நிலையில், ரமேஷின் முதல் மனைவி சித்ரா, அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் அளித்துள்ளார். இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மகளின் திருமணத்திற்கு கூட, அவர் வரக்கூடாது என்று அவரின் இரண்டாவது மனைவி, அவரை வீட்டிற்குள் போட்டு பூட்டி வைத்து அடித்துள்ளார்.

வாய்ப்பே இல்லை
அதன் பிறகு, இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு போக மாட்டேன் என்று என்னுடன்தான் இருந்தார். ஆனால் ஜனவரி 5ந் தேதி போனை ஆஃப் செய்து விட்டு அந்த வீட்டிற்கு சென்றுவிட்டார். தற்போது திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டு நான் நிலைகுலைந்து போனேன். அவர் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை. அவருக்கு மரணபயம் அதிகம், சாதாரண காய்ச்சல் வந்தாலே நான் செத்துவிடுவேனா என்று பயப்படுபவர் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்.

அவங்க தான் ஏதோ பண்ணிட்டாங்க
நேற்று அவருக்கு பிறந்த நாள் என்பதால், மகளையும் என்னையும் பார்க்க வருவதாக இருந்தார். ஆனால்,இரண்டாவது மனைவி அனுமதிக்காததால் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இது தான் உண்மை, குடிப்பதற்காக காசு கேட்டார் என்று சொல்வது எல்லாம் சுத்த பொய், அவங்க தான் ஏதோ பண்ணிட்டாங்க, என் கணவரின் மரணத்தில் தனக்கு சந்தேகம் இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











