Vijayakanth - அய்யோ விஜி போய்ட்டியே.. எங்களுக்கு யாரு இருக்கா?.. விஜயகாந்த் உடலை பார்த்து தியாகு கதறல்
சென்னை: நடிகர் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். இதனால் பலரும் சோகமடைந்திருக்கின்றனர். குறிப்பாக தியாகு கதறியிருக்கிறார்.
கோலிவுட்டில் தவிர்க்கவே முடியாதவர் விஜயகாந்த். ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர். ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு போட்டியாக சினிமாவில் விறுவிறுவென்று முன்னேறியவர் அவர். முக்கியமாக அவரது சாமானிய தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்ததால் ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தில் இருந்த ஹீரோ என்ற பெயர் எடுத்தார்.

அரசியல் என்ட்ரி: 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த் ஆரம்பத்தில் வில்லனாகவே அறிமுகமானவர். அதன் பிறகு முட்டி மோதி ஹீரோ வாய்ப்பை பெற்றுவிட்டார். படத்துக்கு படம் அவருடைய செல்வாக்கு மக்களிடையே ஏறிக்கொண்டே இருந்தது. இதனையடுத்து தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்தார் விஜயகாந்த். அவர் கட்சி ஆரம்பித்தபோது வந்திருந்த கூட்டத்தை பார்த்த பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள்.
எதிர்க்கட்சி தலைவர்: கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றார். அதனையடுத்து அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அந்தக் கூட்டணி தொடரவில்லை. அதற்கு பிறகு விஜயகாந்த்தின் செல்வாக்கு அரசியல் தளத்தில் சரிய தொடங்கியது. இந்த சமயத்தில் உடல்நலக்குறைவும் ஏற்பட்டு அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு திரும்பினார்.
கொரோனா தொற்று: அங்கிருந்து வந்து கடந்த சில வருடங்களாகவே வீட்டில் ஓய்வில் இருந்தார். அவ்வப்போது கட்சி சம்பந்தமான கூட்டத்தில் மட்டும் கலந்துகொண்டிருந்தார். சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவழியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி தேமுதிக பொதுக்குழுவிலும் கலந்துகொண்டார். அதனை பார்த்த ரசிகர்களும், தொண்டர்களும் கேப்டன் இன்னும் சில காலம் உயிரோடு இருப்பார் என்று தெம்பாக இருந்தனர்.
உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இந்த முறை அவருக்கு சிகிச்சை பலன் அளிகாததால் இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் நடிகரும், விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பருமான நடிகர் தியாகு விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார்.
அப்போது அவர் அய்யோ விஜி போயிட்டியே டா எங்களுக்கு இனிமே யாருடா இருக்கா என்று கதறியபடி வந்தார். அதனை பார்த்த பலரும் உருகிப்போயினர். தியாகுவும், விஜயகாந்த்தும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். விஜயகாந்த்துக்கு பிரேமலதாவை திருமணம் செய்துவைக்கலாமா என பிரேமலதாவின் தந்தை தியாகுவிடம் கேட்கும் அளவுக்கு விஜயகாந்த்துக்கு தியாகு நெருக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











