வரலாறு தெரியாத கூட்டம்தான் கமலை எதிர்க்கிறது.. சப்போர்ட் செய்யும் சீமான்
சென்னை: கமல்ஹாசன் இப்போது தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கியிருக்கும் இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அடுத்த மாதம் படம் வெளியாகவிருக்கும் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அதேசமயம் கமல்ஹாசன் பேசிய விஷயம் ஒன்றால் பெரிய சர்ச்சையும் வெடித்திருக்கிறது. இந்நிலையில் கமலுக்கு இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இந்திய திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவர் கமல்ஹாசன் என்று பலரும் சொல்வார்கள். சிறு வயதிலிருந்தே நடித்துவரும் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு வேறு சில துறைகளிலும் இருந்திருக்கிறார். அதனையடுத்து இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கமலை ஹீரோவாக அறிமுகமாக்க; குறுகிய காலத்திலேயே முன்னணி மற்றும் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுவிட்டார். அந்த வயதிலேயே எக்ஸ்பெரிமென்ட்டல் கதைகளை தேர்வு செய்து நடித்து தனி முத்திரை பதித்தார்.
கமலின் இன்னொரு முகம்: வளர வளர இவரது மேஜும் எங்கேயோ சென்றது. ஒருகட்டத்தில் அவருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லை சினிமாவில் என்ற பிம்பமும் உருவாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் அவர் அரசியல் பிரவேசம் செய்தார்.மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவைகளில் போட்டியிட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த வரவேற்பை அரசியல் அவருக்கு கொடுக்கவில்லை. இப்போதும் அரசியலில் இயங்கிவந்தாலும் சினிமாவிலும் அவரது கவனம் திரும்பியிருக்கிறது.
இரண்டாவது இன்னிங்ஸ்: அதன்படி தனது செகண்ட் இன்னிங்ஸை லோகேஷ் கனகராஜோடு தொடங்கினார் அவர். விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கமலையும் அதே எனர்ஜியோடு ரசிகர்கள் பார்த்தார்கள். உலக அளவில் 500 கோடி ரூபாய்வரை படம் வசூலித்தது. இது உற்சாகம் கொடுத்ததை அடுத்து தொடர்ந்து படங்களில் கமிட்டானார். அப்படி அவர் இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை மட்டுமின்றி கடுமையான கிண்டல்களையும் சந்தித்தது. இப்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
சூடுபிடிக்கும் தக் லைஃப் ப்ரோமோஷன்: படமானது அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில்; ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், 'தமிழ் மொழியிலிருந்துதான் கன்னட மொழி தோன்றியது' என்று தெரிவித்தார். அவரது அந்தக் கருத்துக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

முதலமைச்சர் கண்டனம்: கர்நாடகா முதலமைச்சர் இதுகுறித்து கூறுகையில், "கன்னட மொழிக்கென்று தனி வரலாறு இருக்கிறது. அதை பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல் கமல்ஹாசன் பேசியிருக்கிறார்" என்று தெரிவித்தார். மேலும் அந்த மாநிலத்தின் சில அமைச்சர்கள், சில அமைப்பினரும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால் கமல்ஹாசனோ, கேரளாவில் நடந்த ப்ரோமோஷனில் பேசியபோது, 'அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது' என்று தெரிவித்திருந்தார். அதேசமயம் நடிகர் சிவராஜ்குமார் கமலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீமான் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது உண்மை. சத்தியத்திலும் சத்தியம். தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழில் இருந்து தோன்றிய மொழிகள்தான். தனது வரலாற்றை அறிந்துகொள்ளாத, உண்மையை உணராத கூட்டம்தான் கமல்ஹாசனை இப்போது எதிர்த்துக்கொண்டிருக்கிறது" என பேசி தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











