சிக்கல் தீர்ந்தது... ரிலீசானது சீமராஜா.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் ரிலீசானது.
சென்னை: பிரச்சினைகள் முடிவுக்கு வந்ததால், சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் ரிலீசானது.
24 ஏ.எம். ஆர்.டி.ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் சீமராஜா. பொன்ராம் இயக்கியுள்ள இத்திரைப்படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே, பொன்ராம்- சிவகார்த்திக்கேயன் - சூரி கூட்டணியில் வெளிவந்த இரண்டு படங்களும் ஹிட்டானதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது.

அதிகாலைக் காட்சிகள்:
இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 400 தியேட்டர்களில் படம் வெளியாகும் என கூறப்பட்டது. பல தியேட்டர்களில் அதிகாலை 5 மணி காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆன்லைன் மூலம் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

ரசிகர்கள் ஆர்வம்:
படம் ரிலீசாகும் அனைத்து தியேட்டர்களிலும் சிவகார்த்திக்கேயனுக்கு பெரிய பெரிய கட் அவுட்கள், பேனர்கள் என ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். படத்தைப் பார்க்கும் ஆவலில் அதிகாலையிலேயே ரசிகர்கள் தியேட்டர் வாசலில் குவிந்தனர்.

திடீர் ரத்து:
ஆனால், திட்டமிட்டபடி தியேட்டர்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு போடப்படுவதாக இருந்த காட்சிகள் அனைத்தும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன காரணத்தால் படம் ரிலீசாகவில்லை எனத் தெரியாததால், குழப்பத்துடன் அவர்கள் கலைந்து சென்றனர்.

திட்டமிட்டபடி ரிலீஸ்:
சிவகார்த்திக்கேயனின் முந்தைய படமான வேலைக்காரன் வியாபாரத்தின் போது ஏற்பட்ட நிலுவைத் தொகை காரணமாகவே இப்படம் ரிலீசாகவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் ஒருவழியாக பிரச்சினை முடிவுக்கு வந்ததால், பட ரிலீசில் இருந்த சிக்கல் நீங்கியது. திட்டமிட்டபடி 8 மணிக் காட்சிகள் ரிலீசாகின.

ரசிகர்கள் மகிழ்ச்சி:
சிவகார்த்திக்கேயன் படத்தை முதல் ஷோவில் பார்த்துவிட வேண்டும் என எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாந்தபோதும், திட்டமிட்டபடி இன்றே ரிலீசாகி அனைத்து ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது சீமராஜா.


Click it and Unblock the Notifications











