மாமனிதன் சர்ச்சை... இப்பவாவது இளையராஜா மனசு இறங்கி வரணும்... சீனு ராமசாமி உருக்கமாக வேண்டுகோள
சென்னை: சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படம் கடந்தாண்டு ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சர்வதேச அளவில் விருதுகளை வென்று வரும் மாமனிதன், 56வது உலக ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப்பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்பட விழாவில் இளையராஜா கலந்துகொள்ள வேண்டும் என இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச அரங்கில் மாமனிதன்
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்த மாமனிதன் கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படத்தைப் சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் சீனு ராமசாமியையும் விஜய் சேதுபதியையும் பாராட்டினர். இந்தப் படத்திற்கு தொடர்ந்து ஏராளமான சர்வதேச விருதுகள் கிடைத்து வருகின்றன.

ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில்
குடும்பத்திற்காக தன்னையே தொலைத்துவிட்டு குற்ற உணர்ச்சியுடன் வாழும் மிடில் கிளாஸ் மனிதனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து வந்த அவருக்கு, மாமனிதன் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. ஏற்கனவே பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள மாமனிதன், தற்போது 56வது உலக ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப்பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இளையராஜாவுக்கு சீனு ராமசாமி அழைப்பு
ஆஸ்கர் திரைப்பட விழாவின் அங்கீகாரம் பெற்ற இந்த விழா, ஏப்ரல் 25 முதல் 30 வரை அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த விழாவில் இளையராஜா கலந்துகொள்ள வேண்டும் என சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து டிவீட் செய்துள்ள சீனு ராமசாமி, 56வது உலக ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜா கலந்துகொண்டு சிறப்பித்தால் மகிழ்வேன். Golden Globe Award விட வயதில் மூத்த திரைப்பட விழா. பண்ணைப்புரத்தில் அவர் ஜனித்த இடத்தில் எடுத்தப் படம் என்பதாலும், அதே தேதியில் மாஸ்கோ சர்வதேச திரைப்பட திரையிடலுக்கு நான் செல்லவிருப்பதால், இளையராஜா இதில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

இளையராஜா மனசு இறங்கி வர வேண்டும்
மாமனிதன் படத்தை யுவன் சங்கர் ராஜா தான் தயாரித்துள்ளார். முக்கியமாக இந்தப் படத்திற்கு இளையராஜாவும் யுவனும் இணைந்து இசையமைத்துள்ளனர். ஆனால், மாமனிதன் படப்பிடிப்பில் இருக்கும்போதே, இளையராஜாவுக்கும் சீனு ராமசமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனால், இசையமைப்பில் மட்டும் பணிபுரிந்த இளையராஜா, மாமனிதன் படத்தின் எந்த விதமான ப்ரோமோசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

மனம் திறந்த சீனு ராமசாமி
இதுகுறித்து மாமனிதன் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதே சீனு ராமசாமி மனம் திறந்து பேசியிருந்தார். இளையராஜா தன்னை சந்திக்க மறுப்பதாகவும் வெளிப்படையாக தனது வருத்தத்தை பதிவு செய்தார். ஆனாலும் இன்றுவரை இளையராஜா சீனு ராமசாமியை அழைத்து பேசவில்லை என சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே 56வது உலக ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜா கலந்துகொள்ள வேண்டும் என சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீனு ராமசாமியின் டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











