ரூ. 10 லட்சம் தருவதாக ஆசை காட்டிய சீனுராமசாமி.. ‘ஆதார் அட்டை அழகி’யை தர மறுத்த வைரமுத்து!
சீனுராமசாமி ரூ. 10 லட்சம் தருவதாகக் கூறியும் வைரமுத்து ‘ஆதார் அட்டை அழகி’ பாடலைத் தர மறுத்தது தெரிய வந்துள்ளது.
சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி ரூ. 10 லட்சம் தருவதாகக் கூறியும், கவிஞர் வைரமுத்து சீமானுக்காக எழுதிய பாடலை தர மறுத்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
சீமானின் தம்பி திரைக்களமும், ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9-ம் இணைந்து தயாரிக்க, இரா.சுப்ரமணியன் இயக்கும் படம் அமீரா. ஒரு திருடனின் வாழ்க்கையில் ஓர் அழகான பெண் குறுக்கிடுகிறாள். அவள் அழகு அவனைத் திக்குமுக்காட வைக்கிறது.

அந்த அழகின் வழியே வந்த அன்பு அவனது திருட்டுத் தொழிலையே மாற்றுகிறது. அவன் திருந்துகிறான். அவள் எப்படிப்பட்ட அழகி, அந்த அழகு அவனை என்னவெல்லாம் செய்தது என்பதைப் பற்றி கவிஞர் வைரமுத்து ஒரு பாடல் எழுதியுள்ளார்.
15 நிமிடங்களில் பாடல் எழுதி முடிக்கப்பட்ட அந்தப் பாடலை, தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது எதார்த்தமாக இயக்குநர் சீனு ராமசாமியிடம் கூறியுள்ளார் வைரமுத்து.
அந்தப் பாடல் வரிகளைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட சீனுராமசாமி, 'இது என் கதைக்குத்தான் பொருந்தும். என் கதாநாயகிக்குத்தான் பொருந்தும். இதை எனக்குத்தான் கொடுக்க வேண்டும்' என வைரமுத்துவிடம் அடம் பிடித்துள்ளார்.
ஆனால், 'இது சீமானுக்கு என்று எழுதப்பட்ட பாட்டு. கொடுத்த வாக்கு மாறக்கூடாது' என மறுத்துள்ளார் வைரமுத்து. ஆனாலும் விடாத சீனு ராமசாமி, 'இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் ரூ. 10 லட்சம் வாங்கித் தருகிறேன். எனக்குக் கொடுங்கள்' எனக் கேட்டுள்ளார் சீனுராமசாமி.
'எவ்வளவு பணம் கொடுத்தாலும், சீமானுக்குத்தான் இந்தப் பாட்டு' என ஒரேயடியாக மறுத்துவிட்டாராம் வைரமுத்து.
சீனுராமசாமி வற்புறுத்திக் கேட்ட அந்தப் பாடல் தனது கண்ணே கலைமானேவுக்காகத் தானாம். உதயநிதி, தமன்னா நடித்துள்ள இந்தப் படம் நேற்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இயக்குநருக்கும், கவிஞருக்கும் இடையே இப்படிப்பட்ட வாக்குவாதம் உண்டாகக் காரணமாக அமைந்த பாடலின் வரிகள் இதோ உங்களுக்காக...
ஆதார் அட்டையிலும்
அழகானவள்
அழுகின்ற வேளையிலும்
அழகானவள்
ஆடை சூடியும்
அழகானவள்
அதனைத் தாண்டியும்
அழகானவள்
பேசும்போதும் அழகானவள் - நீ
பேசாத போது பேரழகானவள்
நெற்றி சரியும்
கற்றை முடியைச்
சுட்டு விரலால்
சுற்றும் போது
சுழற்றியடிக்கும் புயலானவள்
*
பத்துகிராம் புன்னகையில்
பைத்தியமாய் ஆனேன்
பூப்பறிக்கும் உயரம் கண்டு
புத்திமாறிப் போனேன்
ஓடைப்பார்வை தீண்டிச் செல்ல
அரசனாகிப் போனேன்
ஆடை ஓரம் உரசும் போது
அடிமையாகிப் போனேன்
சாயம்போன வாழ்வோடு
நிறமூட்டினாய்
ஈயம்போன பாத்திரத்தில்
ஒளியேற்றினாய்
அழகென்ற பொருள்கொண்டு
அன்பென்ற வழிகண்டு
திருடுகின்ற என்வாழ்வைத்
திருவாக்கினாய்


Click it and Unblock the Notifications











