'நமக்கு எதுக்கு மாத்தையா? மாற்றய்யா?' முரளிதரன் பயோபிக்.. விஜய் சேதுபதிக்கு தொடரும் எதிர்ப்பு
சென்னை: முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.
எண்ணூறு விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ள அவர் வாழ்க்கை கதை சினிமாவாகிறது.

ஈழத் தமிழர்கள்
இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதற்கு ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைக் கட்சி உள்பட வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் அவர் இந்த பயோபிக்கில் நடிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. அவர் நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது.

முத்தையா முரளிதரன்
இந்நிலையில் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிப்பது உறுதியானது. சர்வதேச கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பதால், படத்துக்கு '800' என தலைப்பு வைத்துள்ளனர். 'கனிமொழி' படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார்.

மீண்டும் எதிர்ப்பு
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். விஜய் சேதுபதி, முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது உறுதியானதை அடுத்து அவருக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சீனு ராமசாமி
இந்நிலையில் விஜய் சேதுபதியை, 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமி, முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்பது போல அவர் தெரிவித்துள்ளார்.

நமக்கெதற்கு மாத்தையா?
அவர் ட்விட்டர் பதிவில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள் இதயம். அவர் நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











