வாருங்கள்! இது நீண்ட பயணம்… ரசிகர்களை அழைக்கும் செல்வராகவன்!
சென்னை: இயக்குனர் செல்வராகவன் அவருடைய பயணத்தில் ரசிகர்களும் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒர் கல்ட் இயக்குனர் என்ற பிம்பத்தோடு வலம் வருபவர் செல்வராகவன். தற்போது சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படத்தை இயக்கி வருகிறார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என கூறப்படுகிறது.

சமீப காலங்களில் செல்வாவின் ட்வீட்டுகளைப் பார்க்கும்போது, முற்றும் துறந்த ஒரு ஞானி இந்த பிரபஞ்சத்தின் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து அதை மெல்ல அசைபோடுவது போலவே உள்ளன.
குழந்தையும் ஞானியும்தான் மகிழ்ச்சியானவர்கள் என்ற பாடல் வரிகளைப் போல, ஒரு சம்பவத்தை பகிர்ந்திருந்தார். "நீ சிறு வயதில் எப்படி துறுதுறுவென இருந்தாயோ இப்போதும் அப்படியே இருக்கிறாய்" என அவருடைய தாயார் ஐந்து முறை சொல்லி மகிழ்ந்ததாகவும், அவர் வாழ்க்கைக்கு அதுபோதும் என்றும் ட்வீட் செய்திருந்தார்.
பணம், போட்டி, பொறாமை, வசதியான வாழ்க்கை என எதை எதையோ தேடி மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது, அவருடைய குழந்தை பருவத்தோடு அவர் தாய் அவரை ஒப்பிட்டதை நினைத்து மகிழ செல்வராகவனுக்கு நேரம் இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். பல புத்தகங்கள் படித்து வளரும் அறிவை இந்த ஒரு ட்வீட் நச் என சொல்கிறது.
அதேபோல், இன்று என்னவோ மனதில் இருப்பதை சொல்லத் தோன்றியது. நாமெல்லாம் உற்ற நண்பர்கள். நான் அப்படித்தான் பார்க்கிறேன். நீங்கள் இல்லை எனில் நான் திரைப்படங்களை இயக்கியிருக்க மாட்டேன். உங்கள் அன்புதான் என்னை செயல்பட வைக்கிறது. வாருங்கள்! நீண்ட பயணம். சேர்ந்தே போவோம். என நேற்று ட்வீட் செய்திருக்கிறார்.
இவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் என்.ஜி.கே திரைப்படம் எதிர்பார்ப்பதைவிட இன்னும் தாமதமாகும் போல் தெரிகிறது. என்.ஜி.கே அப்டேட் தவிர எல்லாத்தையும் போடுறீங்க தலைவா என ரசிகர்கள் குமைந்துகொண்டாலும், செல்வராகவனின் வாழ்க்கைப் பாடங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications











