செல்வராகவன் -ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் மேஜிக்.. காதலை உரக்க பேசும் மெண்டல் மனதில்!
சென்னை: நடிகர் ஜிவி பிரகாஷ், மாதுரி ஜெயின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் இணைந்துள்ள மெண்டல் மனதில் படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கி வருகிறார். தனுஷுடனான நானே வருவேன் படத்தை தொடர்ந்து இயக்கத்தில் இணையாமல் இருந்த செல்வராகவன், நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பூஜையுடன் சூட்டிங் துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. படத்தை பேரலல் யூனிவர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். காதலை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களத்தை செல்வராகவன் உருவாக்கியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன்: இயக்குநர் செல்வராகவன் பல காதல் படைப்புகளை தனித்துவமாக உருவாக்கி அதன்மூலம் முத்திரை பதித்த படைப்பாளியாக கோலிவுட்டில் பல ஆண்டுகளாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். நானே வருவேன் படத்தை தனுஷை வைத்து கொடுத்த செல்வராகவன் தொடர்ந்து படங்களை இயக்குவதிலிருந்து விலகி நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படத்தில் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குநர் அவதாரத்தை கையில் எடுத்துள்ளார் செல்வராகவன்.
மெண்டல் மனதில் படம்: அடுத்ததாக புதுப்பேட்டை 2 அல்லது ஆயிரத்தில் ஒருவன் 2 படங்களின் வேலையை துவங்குவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த நிலையில் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு மீண்டும் மயக்கம் என்ன 7ஜி ரெயின்போ காலனி படங்களின் வரிசையில் காதல் ஜானரை கையிலெடுத்துள்ளார் செல்வராகவன். அவரது இயக்கத்தில் இசை அசுரன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்தப் படத்தின் நாயகனாக மாறியுள்ளார். அவருக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் இணைந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் அடுத்தடுத்து மும்முரமாக சூட்டிங் நடந்து வருகிறது.
ரொமாண்டிக் கதைக்களம்: படத்திற்கு மெண்டல் மனதில் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வித்தியாசமான வகையில் வெளியாகியுள்ளது. இதில் பட்டாம்பூச்சுகளுடன் ஜிவி பிரகாஷ் காணப்படுகிறார். காதல் உணர்வை பட்டாம்பூச்சுகளுடன் ஒப்பிடும் வழக்கம் உள்ள நிலையில், அதை குறிக்கும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துவரும் நிலையில் அவரே தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். காதலை உரக்க பேசும் வகையில் மெண்டல் மனதில் படத்தின் கதைக்களத்தை செல்வராகவன் உருவாக்கியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் சூட்டிங்: படத்தின் பர்ஸ்ட் ஷெட்யூல் சென்னையில் துவங்கி விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். செல்வராகவன் இயக்கத்தில் இறுதியாக வெளியான நானே வருவேன் படம் அவருக்கு கைக்கொடுக்காத நிலையில், தற்போது தனக்கு சிறப்பாக வரும் காதல் கான்செப்டை கையிலெடுத்துள்ளார் செல்வராகவன். இசையில் சதமடித்துள்ள ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ள நிலையில், பாடல்களும் சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











