கவினும் மணிகண்டனும் எந்த ரோல் கொடுத்தாலும் தூக்கி சாப்பிடுவாங்க.. பாராட்டித்தள்ளிய பிரபல இயக்குநர்!
சென்னை: தமிழ் சினிமாவின் அடுத்த தரமான நடிகர்கள் பட்டியலில் கவின் மற்றும் மணிகண்டன் இணைந்து விட்டதாக இயக்குநர் செல்வராகவன் ட்வீட் போட்டு பாராட்டியுள்ளார்.
தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, விஷால், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களே இளம் நடிகர்கள் ஸ்டேஜை தாண்டி சீனியர் ஆகிவிட்டனர். இந்நிலையில், கோலிவுட்டின் இளம் நடிகர்களாக தற்போது கவின், மணிகண்டன் உள்ளிட்டோர் களம் இறங்கி உள்ளனர்.

இந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஆனால் கடந்த ஆண்டு வெளியான குட்நைட் திரைப்படம் அளவுக்கு அனைவரையும் ஈர்க்கவில்லை என்றாலும் மணிகண்டனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
டாடா vs ஸ்டார்: அதே போல கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. அதைவிட பல மடங்கு சிறப்பாக ஸ்டார் படத்தில் கவின் நடித்திருந்தாலும் அந்த படம் அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும் அளவுக்கு இயக்குநர் இளன் இயக்கவில்லை என்கிற விமர்சனங்கள் கடுமையாக எழுந்துள்ளன.
சூப்பர் நடிகர்கள்: வெற்றி மற்றும் தோல்வி சினிமாவில் மாறி மாறி வரும். ஆனால், சிறந்த நடிகர்களாக ரசிகர்களை கவர்ந்து விட்டால் அவர்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பயணிப்பார்கள். கவின் மற்றும் மணிகண்டன் இருவரும் சூப்பர் நடிகர்கள் என இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டு பாராட்டியுள்ளார்.

செல்வராகவன் பாராட்டு: கவின் மற்றும் மணிகண்டன் இருவரும் சிறந்த நடிகர்கள். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இருவருமே யதார்த்தமாகவும் உண்மைக்கு மிக நெருக்கமாகவும் நடித்து வருகின்றனர். எந்த விதமான கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் ஏற்று நடிக்கக் கூடிய திறமை இந்த இருவருக்குமே உள்ளது என்பது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என செல்வராகவன் தனது பதிவில் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

நன்றி தெரிவித்த நடிகர்கள்: ஜீனியஸ் இயக்குநர் என அழைக்கப்படும் செல்வராகவனிடம் இருந்து இப்படி ஒரு வாழ்த்து கிடைத்துள்ள நிலையில், நடிகர் கவின் கண்டிப்பாக இதற்கு எந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியுமோ இருப்பேன் சார், ரொம்ப நன்றி என பதிவிட்டுள்ளார். மணிகண்டனும் செல்வராகவனின் பாராட்டை பார்த்து பூரித்துப்போய் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் படம் தான் சார் எனக்கு ரொம்பவே இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளது என்றும் மணிகண்டன் கூறியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில்: தம்பி தனுஷ் பிசியாக இருப்பதால் கவின் அல்லது மணிகண்டன் என இந்த இருவரில் ஒருவரை வைத்து செல்வராகவன் அடுத்த படம் பண்ண போகிறாரா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். செல்வராகவன் இயக்கத்தில் கவின் அல்லது மணிகண்டன் என இருவரில் யார் நடித்தாலும் அந்த படம் மிகப்பெரிய படமாக வரும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











