அதை நினைத்து ஒவ்வொரு இரவும் அழுகிறாய்..14 வயது செல்வாவுக்கு இயக்குனர் செல்வராகவனின் டச்சிங் போஸ்ட்
சென்னை: அதை நினைத்து ஒவ்வொரு இரவும் அழுகிறாய் என்று இயக்குனர் செல்வராகவன் தனக்குத்தானே எழுதிக்கொண்ட டச்சிங் போஸ்ட் வைரலாகி வருகிறது.
Recommended Video
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன உட்பட சில படங்களை இயக்கியவர் செல்வராகவன்.
அடுத்து, புதுப்பேட்டை படத்தின் அடுத்த பாகத்தை இயக்க இருக்கிறார். இதை அவரே தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு இரவும்
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள போஸ்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 14 வயதுள்ள தனக்கு, இப்போது இருக்கும் அவர் அறிவுரைக் கூறுவது போன் பதிவு அது. அதில் அவர் கூறியிருப்பதாவது: நீ மாற்றுத் திறனாளி என்பதால், உன் தோற்றத்தைக் கண்டு இந்த உலகம் சிரிக்கிறது. ஒரு கண்ணில் பார்வை குறைபாடு. எங்கு சென்றாலும் மக்கள் முறைக்கிறார்கள் அல்லது கிண்டலடிக்கிறார்கள். அதை நினைத்து ஒவ்வொரு இரவும் அழுகிறாய்.

கவலைப்படாதே
சில நேரம் கடவுளிடம், எனக்கு மட்டும் ஏன்? ஏன் என் கண்ணை பறித்தாய்? என்று கேட்கிறாய். கவலைப்படாதே செல்வா. இன்னும் சரியாக பத்து வருடங்களில் மிகப்பெரிய வெற்றிப் படத்தை எழுதி இயக்கப் போகிறாய். அது உன் வாழ்க்கையை மொத்தமாக மாற்றும். அப்போது இந்த உலகம் உன்னைப் பார்க்கும். கிண்டலாக அல்ல, மரியாதையுடன். அடுத்த 10 வருடங்களில் சிறந்த டிரெண்ட் செட்டிங் படம் மூலம், தமிழ் சினிமா வரலாற்றில் நீ இடம்பிடிப்பாய்.

தைரியமாக இரு
மக்கள் உன்னை ஜீனியஸ் என்று அழைப்பார்கள். அவர்கள், சிறுவயதில் உனக்கு தொந்தரவாக அமைந்த அந்த கண்ணை, பார்க்கமாட்டார்கள். தனது படங்களின் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றிய மனிதனை பார்ப்பார்கள். அதனால், தைரியமாக இரு. இறைவன், விலைமதிப்பற்ற ஒன்றை உன்னிடம் இருந்து எடுத்துக் கொண்டால், அதை விட அற்புதமான ஒன்றை திருப்பித் தருவார். அதனால் உற்சாகத்துடன் இரு.

வருங்காலங்களில்
புகைப்படங்களில் சிரித்தபடி நில். (நீ சிரிக்கிற ஒரு புகைப்படத்தை கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை). ஏனென்றால் வருங்காலங்களில் உனது புகைப்படங்கள் பல எடுக்கப்பட இருக்கின்றன. இவ்வாறு கூறியுள்ளார். இந்த மெசேஜுக்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளர். சிலர், தங்களுக்கான இன்ஸ்பிரேஷன் நீங்கள், இன்னும் சாதிப்பீர்கள் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











