Selvaraghavan: பான் இந்தியா ஸ்டார்ஸ்... அரசியல் கதைக்களம்... அதிரடியாக களமிறங்கும் செல்வராகவன்!
சென்னை: தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன்.
கடைசியாக அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது.
இயக்குநராக மட்டும் இல்லாமல் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார் செல்வராகவன்.
இந்நிலையில், செல்வராகவனின் புதிய படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவனின் புதிய படம் தொடங்கியது: தனுஷின் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அண்ணன், தம்பிகளான தனுஷ் - செல்வராகவன் காம்போ கோலிவுட்டில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை தொடங்கி கடந்தாண்டு வெளியான நானே வருவேன் படம் வரை ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
தம்பி தனுஷ் இல்லாமல் 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், NGK, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இன்னொரு பக்கம் நடிகராகவும் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டினார். விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிகராக அறிமுகமான செல்வராகவன், சாணி காயிதம், பகாசூரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது விஷாலின் மார்க் ஆண்டனி படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதனிடையே விரைவில் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் இயக்கவிருப்பதாக செல்வராகவன் அறிவித்திருந்தார். அதேபோல், ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகமும் விரைவில் உருவாகும் எனக் கூறியிருந்தார். இன்னொரு பக்கம் சந்தானம் ஹீரோவாக நடித்த 'மன்னவன் வந்தானடி' படத்தையும் இயக்கி வந்தார்.

இந்நிலையில் செல்வராகவனின் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின. இது செல்வராகவன் இயக்கும் படம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், செல்வராகவன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், அவருடன் யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ ஆகியோர் நடிக்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது. ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகமாகிறார். இன்னொரு நாயகியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்தப் படம் குறித்து பேசியுள்ள அறிமுக இயக்குநர் ரெங்கநாதன், "தென் தமிழ்நாட்டின் அரசியலை பேசும் இப்படம், பரபரப்பான கதைக்களத்தில் உருவாகவுள்ளதாகக் கூறியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், ராமநாதபுரம், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இசையமைப்பாளர் உள்ளிட்ட மற்ற விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











