கொஞ்ச நேரம் அமைதியா இருந்து பாருங்க.. வீடியோ வெளியிட்ட செல்வராகவன்
சென்னை: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்த படங்களில் செல்வராகவன் முக்கியமான இயக்குநராக மாறினார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென இயக்கதிலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்துகிறார். கடைசியாக அவர் ராயன் படத்தில் நடித்தார். இந்தச் சூழலில் செல்வராகவன் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
செல்வராகவன் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை பாதிக்கட்டத்தில் செல்வாவின் கைகளுக்கு வந்தது. அதனையடுத்து தன்னுடைய பதின்ம வயதிலேயே எந்த வித பதற்றமுமின்றி அந்தப் படத்தை இயக்கி முடித்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் படத்துக்கு கைக்கொடுக்க ஓரளவு அடையாளப்பட்டது படம்.

காதல் கொண்டேன்: இரண்டாவது படமாக அவர் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படம்தான் தனுஷுக்குள் ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதையும், செல்வராகவனுக்குள் மிகச்சிறந்த இயக்குநர் இருக்கிறார் என்பதையும் வெளிச்சம் போட்டு காண்பித்தது. இன்றுவரை அந்தப் படம் பலரால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை அவர் இயக்கிய பல படங்கள் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் கவனம்: இடையில் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டு அவரை விவாகரத்து செய்த செல்வராகவன்; தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்குமான திருமணம் அன்போடு சென்றுகொண்டிருக்கிறது. இயகக்த்திலிருந்து இப்போது ஒதுங்கியிருக்கும் அவர் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.
அப்படி அவர் பீஸ்ட், பகாசூரன், சாணிக்காயிதம், மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய படங்களையும் அவர் இயக்கவிருக்கிறார். கடைசியாக தனுஷ் எழுதிய கதையை நானே வருவேன் என்ற பெயரில் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருந்தாலும் செல்வராகவன் ஒரு இயக்குநராக கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
செல்வராகவன் வீடியோ: இந்நிலையில் செல்வராகவன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று எப்போதாவது யோசித்திருக்கோமா. கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று யோசிக்க நேரம் கிடைத்தால்தானே நாம் யோசிப்போம். பிறந்ததில் இருந்தே பேச்சுதான். பள்ளிக்கூடத்தில் பேச்சு, கல்லூரியில் பேச்சு, கேர்ள் ஃப்ரெண்டோடு பேச்சு, திருமணத்துக்கு பிறகு பேச்சு என ஒரே பேச்சு பேச்சு பேச்சு.
திடீர் அமைதி: எப்போதாவது நமக்கு ஒரு திடீர் அமைதி கிடைத்தால் பேச யாருமே கிடைக்கவில்லை என்றால் நாம் என்ன செய்வோம். உடனே பயந்து நடுங்கி எப்போதோ பழகின நண்பருக்கு ஃபோன் செய்து தெரிந்த பெண்ணுக்கு ஃபோன் செய்து, இல்லையென்றால் ஆஃபிஸில் இருக்கும் பெண்ணுக்கு ஃபோன் செய்து சும்மா பல மணி நேரம் பேசியே அமைதியை கண்டுகொள்வதே இல்லை. கடவுள் நமக்கு தனிமையை கொடுத்தால்கூட அந்தத் தனிமையை நான் பயன்படுத்திக்கொள்வதே இல்லை. பேசி பேசிய முடித்திடுவோம்.
அமைதியாக இருங்கள்: ஒரு மணிநேரம் பேசாமல் இருந்து பாருங்களேன். உங்களை சுற்றி ஹம் என்ற சத்தம் கேட்கும். இதை பலவிதமாக தனியாக இருந்து கேட்டுப்பாருங்கள். தனியாக பயணம், தனியாக சாப்பாடு இதையெல்லாம் செய்து பாருங்கள். இதுதான் அமைதியோட உண்மையான அர்த்தம். அமைதியின் அழகும். அப்படி இருந்தால் சாதாரணமாக நீங்கள் யார்கூடவும் பேச மாட்டீர்கள். பேசுவதற்கு முன்பு யோசித்து பேசுவீர்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











