செல்வராகவன் நினைத்தது புதுப்பேட்டை 2. எடுத்தது நானே வருவேன்... தனுஷ் பங்களிப்பு தெரியுமா?
சென்னை: தயாரிப்பாளர் தாணு அவர்கள் தயாரிப்பில் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் நாளைய மறுநாள் ரிலீசாகவுள்ளது.
பல நடிகர்கள் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் போட்டி போடவிருக்கிறது நானே வருவேன்
நானே வருவேன் திரைப்படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்

ஹேட்ரிக் வெற்றி
ஏற்கனவே தயாரிப்பாளர் தாணு மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளிவந்த அசுரன் மற்றும் கர்ணன் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்போது நானே வருவேன் திரைப்படம் மூலம் இந்தக் கூட்டணி ஹேட்ரிக் அடிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படங்கள் தயாரிப்பதில் பல ஆண்டுகளாக வெற்றிகளை குவித்து வரும் தாணு இந்த முறை பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்துடன் தனது யுக்தியின் மூலம் திரையரங்குகளை பிடித்து நானே வருவேன் திரைப்படத்தை போட்டியாக களத்தில் இறக்கியுள்ளார்.

டபுள் ஆக்ஷன்
கொடி, பட்டாசு ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ் இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். முதன் முறையாக கதாநாயகன் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், சூர்யா போன்றவர்கள் கதாநாயகன் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கியுள்ளனர். தனுஷும் அந்த மேஜிக்கை தொடர்வார் என நம்பப்படுகிறது.

விட்டதை பிடிப்பாரா தாணு
இதற்கு முன்னர் கமல்ஹாசன் கதாநாயகன் மற்றும் வில்லனாக நடித்த ஆளவந்தான் திரைப்படத்தை தாணு அவர்கள்தான் தயாரித்திருந்தார். அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படம் ரிலீஸ் ஆனபோது பெரிதாக ஓடவில்லை என்றாலும் இப்போது ரசிகர்களால் பரவலாக கொண்டாடப்படக்கூடிய ஒரு படம். தாணு அவர்களே அந்த படத்தை எடிட் செய்து ரீ-ரிலீஸ் செய்வேன் என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்நிலையில் அதே பாணியில் தனுஷ் கதாநாயகன் மற்றும் வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தின் மூலம் ஆளவந்தானில் விட்டதை நானே வருவேன் படத்தின் தாணு பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை 2 வேண்டாம்
சில மாதங்களுக்கு முன்பு செல்வராகவன் ஒரு பேட்டியில் புதுப்பேட்டை 2 எடுக்க ஆர்வம் உள்ளதாக கூறியிருந்தார். நானே வருவேன் திரைப்படத்தை எடுப்பதற்கு முன்னர் எந்தக் கதையை தேர்வு செய்யலாம் என்று ஆறு மாதங்கள் பேச்சுவார்த்தையில் இருந்தார்களாம் தனுஷ் மற்றும் செல்வராகவன். புதுப்பேட்டை 2 ஐடியாவை செல்வா கூறினாராம். ஆனால் இறுதியில் தனுஷ் கூறிய நானே வருவேன் கதையைத்தான் இருவரும் படமாக்கியுள்ளனர். இதில் தனுஷை தவிர்த்து நடிகர்கள் பிரபு, யோகி பாபு, நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து செல்வராகவனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











