மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தார்: அப்பா வயது நடிகர் மீது இளம் நடிகை புகார்
மும்பை: நடிகர் ஆதித்யா பன்சோலி மயக்க மருந்து கொடுத்து தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக பிரபல பாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார்.
முன்னணி பாலிவுட் நடிகை ஒருவர் நடிகர் ஆதித்யா பன்சோலி மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இந்நிலையில் அவர் மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

மும்பை
ஒரு நடிகையாக வேண்டும் என்ற கனவில் மும்பைக்கு வந்தேன். அதே ஆண்டு நான் நடிகர் ஆதித்யா பன்சோலியை சந்தித்தேன். அவருக்கு அப்பொழுது 38 வயது, கிட்டத்தட்ட என்னை விட 22 வயது பெரியவர். நான் பெண்கள் விடுதியில் தங்கியிருந்தேன். அவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அதில் அவர் மகளுக்கு என் வயது தான்.

மயக்க மருந்து
2004ம் ஆண்டு நான் நடிகர் ஆதித்யா பன்சோலியுடன் சேர்ந்து பார்ட்டிக்கு சென்றேன். பார்ட்டியில் மது அருந்திய பிறகு எனக்கு மயக்கமாக வந்தது. அவர் தான் மயக்க மருந்து கலந்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டேன். பார்ட்டி முடிந்த பிறகு என்னை விடுதியில் விடுவதாக அவர் தெரிவித்தார். அவரின் ரேஞ்ச் ரோவர் காரில் என்னை அழைத்துச் சென்றார். கார் யாரி ரோட்டில் சென்றபோது வாகனத்தை நிறுத்திவிட்டு வலுக்கட்டாயமாக என்னை தொட்டார். என்னை புகைப்படமும் எடுத்திருக்கிறார். அது அப்பொழுது எனக்கு தெரியவில்லை.

மிரட்டல்
அடுத்த முறை அவரை பார்த்தபோது கணவன் மனைவி இடையேயான உறவு நமக்குள்ளான உறவு. இனி அப்படியே இருப்போம் என்றார். என் அப்பா வயது உங்களுக்கு. நான் என் வயதுக்கு ஏற்றவரை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றேன். உடனே அவர் என்னை மயக்க நிலையில் எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டத் துவங்கினார். அவர் ஆசைக்கு இணங்காவிட்டால் புகைப்படங்களை பிறரிடம் காட்டுவேன் என்று மிரட்டினார். நான் மும்பைக்கு புதுசு, எனக்கு யாரையும் தெரியாது. அதை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

அடி உதை
2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பன்சோலி என்னை பல்வேறு இடங்களில் வைத்து மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உறவு கொண்டார். அனைத்தையும் புகைப்படம் எடுத்து மிரட்டினார். ஒரு முறை புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு சென்றபோது ரிக்ஷாவை வழிமறித்து என்னை அடித்தார். அந்த வழியாக சென்ற ஒருவர் என்னை காப்பாற்றினார். அந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி பிபின் பிகாரியிடம் புகார் அளித்தேன்.

போதைப்பொருள்
2004-2005ம் ஆண்டு நான் என் உறவினர் வீட்டில் தங்கினேன். அங்கும் வந்து எனக்கு மயக்க மருந்து கொடுத்து உறவு கொண்டார். மேலும் என்னை அடித்தார். எனக்கு போதைப்பொருள் கொடுத்து என்னை புகைப்படம் எடுத்தார். பின்னர் 2006-2007ம் ஆண்டில் நான் வெர்சோவாவில் வீடு வாங்கி தனியாக வசித்தேன். போலி சாவி போட்டு என் வீட்டிற்குள் வந்து அடித்தார். மதுபோதையில் அட்டகாசம் செய்தார். என்னை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சாவியை எடுத்துச் சென்றார்.

போலீஸ்
மும்பைக்கு வந்து என்னுடன் வசித்த என் சகோதரியையும் தாக்கினார். நான் பிரபலமான பிறகு பழைய புகைப்படங்களை காட்டி மிரட்டி பணம் கேட்டார். நான் அவருக்கு ரூ. 50 லட்சம் கொடுத்தேன். அவர் என்னையும், என் சகோதரியையும் மிரட்டி அனுப்பிய மெசேஜ்கள் என்னிடம் உள்ளன. என்னை கண்டபடி எடுத்த புகைப்படங்களை அனைவருக்கும் அனுப்பி என் கெரியரை நாசம் செய்துவிடுவேன் என்று மிரட்டினார் என்று அந்த நடிகை தனது மனுவில் தெரிவித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் போலீசார் ஆதித்யா பன்சோலி மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஆதித்யாவுக்கு ஜூலை 19ம் தேதி வரை ஜாமீன் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











