காலமானார் பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு!
Recommended Video

சென்னை: ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களில் நடித்த டைப்பிஸ்ட் கோபு உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.
அதே கண்கள் படம் மூலம் நடிகர் ஆனவர் டைப்பிஸ்ட் கோபு. நாகேஷுக்கு படத்தில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் அவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜித், விஜய் என்று மூன்று தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

படங்கள் தவிர்த்து சின்னத்திரை தொடர்களிலும், ஏராளமான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். 84 வயதாகும் அவர் சென்னை ராயப்பேட்டையில் மனைவி மற்றும் இரண்டாவது மகனுடன் வசித்து வருகிறார்.
அவருக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மாலையில் மரணமடைந்தார் கோபு.
நாகேஷின் நெருங்கிய நண்பரான கோபு மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்திருந்தாலும் வாடகை வீட்டில் வறுமையில் வாழ்ந்து வந்தார். யாரிடமும் உதவி என்று கேட்டு செல்லாத கோபுவுக்கு திரையுலகினர் போதிய உதவிகள் செய்யவில்லை என்ற குறை நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.
டைப்பிஸ்ட் கோபு 600க்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் மணக்கால் ஆகும். 1959ம் ஆண்டு நெஞ்சே நீ வாழ்க என்ற நாடகத்தில் டைப்பிஸ்ட் ரோலில் நடித்ததன் மூலம் இவருக்கு டைப்பிஸ்ட் கோபு என்ற பெயர் வந்தது. இவரது இயற்பெயர் கோபாலரத்தினம். 1965ம் ஆண்டு கே. பாலச்சந்திரன் நாணல் படம் மூலம் திரையுலகிலும் அறிமுகமானார்.
இவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை - அதே கண்கள், உயர்ந்த மனிதன், அகத்தியர், காசேதான் கடவுளடா, மைக்கேல் மதன காமராஜன், வேலைக்காரன், ரிக்ஷா மாமா, பெரியார்.


Click it and Unblock the Notifications











