குழந்தை நட்சத்திரம் டூ குணச்சித்திர நடிகை... 'சம்சாரம் அது மின்சாரம்' லக்ஷ்மியின் பிறந்த நாள் இன்று!
சென்னை: மூத்த பழம்பெரும் நடிகையான லக்ஷ்மி இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சென்னையை பூர்விகமாக கொண்டவர் நடிகை லக்ஷ்மி. 1961ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீவள்ளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர்.
இந்தப் படத்தில் குழந்தை வள்ளியாக நடித்திருந்தார் லக்ஷ்மி. அதனை தொடர்ந்து 1968ஆம் ஆண்டு வெளியான ஜீவனாம்ஸம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

5 மொழிகளிலும்..
அதே ஆண்டு கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியிலும் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை லக்ஷ்மி. தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நடிகை லக்ஷ்மி.

முன்னணி நடிகர்களுடன்
1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை லக்ஷ்மி பிரபல கன்னட நடிகரான ஆனந்த் நாகுடன் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த ஜோடிக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது. தமிழிலும் சிவாஜி, எம்ஜிஆர், ஜெய் சங்கர், ரஜினி, சிவகுமார் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார் லக்ஷ்மி.

எம்ஜிஆர், சிவாஜியுடன்
தமிழில் காவல் தெய்வம், அன்னையும் பிதாவும், மன்னிப்பு, மாட்டுக்கார வேலன், எதிரொலி, மன்னவன், பெண் தெய்வம், நூற்றுக்கு நூறு, காசேதான் கடவுளடா, புகுந்த வீடு, ராஜ ராஜ சோழன், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகை லக்ஷ்மி. ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் நடிகை லக்ஷ்மி.

குணச்சித்திர வேடங்களில்..
விசு இயக்கத்தில் வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வீட்டின் மூத்த மருமகளாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் லக்ஷ்மி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. லக்ஷ்மியின் நடிப்பும் பெரும் பாராட்டை பெற்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக பல படங்களில் நடித்துள்ள லக்ஷ்மி தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இன்று 69வது பிறந்தநாள்
ஜீன்ஸ் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பாட்டியாக நடித்த லக்ஷ்மி நான் அவனில்லை, உன்னைப்போல் ஒருவன், அய்யா, வேல் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் கடந்த 2019ஆம் ஆண்டு ஓபேபி, மனமதடு 2, கேங் லீடர் ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தார். தற்போதும் சினிமாவில் பிஸியாக உள்ள நடிகை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் மூத்த நடிகை லக்ஷ்மி இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications











