அம்மா சொன்னதை கடைசி வரை பின் பற்றிய சரோஜா தேவி.. கோடிகளைக் குவித்தாலும் NO சொல்லக் காரணம் அதுதான்!
சென்னை: இந்திய திரை உலகின் முதல் பான் இந்திய நடிகை என்ற பெருமைக்குச் சொந்தக்காரி மூத்த நடிகை சரோஜா தேவி. அவர் இன்று அதாவது ஜூலை 14ஆம் தேதி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என சரோஜா தேவி இந்திய திரை உலகில் கொடிகட்டிப் பறந்த நடிகை. இவர் தனது திரை வாழ்க்கை முழுவதும் அவரது தாயார் ருத்ரம்மா கூறிய அறிவுரைகளை கடைசி வரை பின் பற்றி நடித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைந்தது ஒட்டுமொத்த இந்திய திரை உலகத்தினருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், அவர் ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்குமானவராகவே கருதப்படுகிறார். கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி, சலப சுந்தரி, அபிநய காஞ்சனா மாலா, அபிநய பாரதி என புனைப்பெயர்கள் இவருக்கு உண்டு.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் உடன் இணைந்து 26 படங்களில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல், இவர் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார். தமிழில் மட்டும் இல்லாமல் அவர் கால் பதித்த அனைத்து மொழி சினிமாக்களிலும் அவர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

திருமணத்திற்குப் பின்னரும்: 1967ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். இன்றைய காலகட்டத்திலும் சரி அன்றைய காலகட்டத்திலும் சரி, ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிறது என்றால் அவர்கள் அதன் பின்னர் படங்களில் நடிக்க மாட்டார்கள். அப்படியே நடித்தாலும் குழந்தைகள் பிறந்து, வளர்ந்து ஒரு அளவுக்கு ஆன பின்னர், மீண்டும் நடிக்க வருவார்கள். சம காலத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், நடிகைகள் ஜோதிகா, சிம்ரன் மற்றும் தேவயானி போல. ஆனால் சரோஜா தேவி அப்போதே தனது திருமணத்திற்குப் பின்னர் தொடர்ந்து நடித்தார்.
கடைசி வரை: தனது திரை வாழ்க்கை முழுவதும் எந்த நடிகருடனும் கிசு கிசுக்கப்படாத நடிகையாக வலம் வந்தார் சரோஜா தேவி. இவர் மீது கொண்ட அன்பினால் பலரும் தங்களது குழந்தைகளுக்கு சரோஜா என பெயர் சூட்டினார்கள். இன்னும் சொல்லப்போனால், சரோஜா தேவி என முழுப்பெயரையும் சூட்டியவர்களும் உள்ளார்கள். மறைந்த நடிகை சரோஜா தேவி தனது திரை வாழ்க்கையில் தனது தாயார் ருத்ரம்மா கூறிய அறிவுரைகளை கடைசி வரை பின்பற்றினார்.
தாயாரின் சொற்கள்: அதாவது ருத்ரம்மா தனது மகள், சரோஜா தேவி இடம், எக்காரணம் கொண்டும் நீச்சல் உடைகளில் நடிப்பதோ, அறைகுறை ஆடைகளில் நடிப்பதோ கூடாது எனக் கூறி உள்ளார். இதனை சரோஜா தேவி கடைசி வரை பின்பற்றினார். தனது தாயாரின் இந்த சொற்களை பின் பற்றியதன் மூலம் அவர் தனது தாயாரின் சொற்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார் என்பதை திரை உலகத்தினருக்குத் புரியவைத்தது. பல தயாரிப்பாளர்கள் சம்பளத்தை ஏத்திக் கொடுக்கிறோம் எனக் கூறியும் சரோஜா தேவி முடியவே முடியாது எனக் கூறிவிட்டார்.


Click it and Unblock the Notifications











