அனாதையா பையனோடு நடு ரோட்டில் நின்னேன்.. ஏன் வாழனும்னு நினைச்சேன்.. தீபா கண்ணீர் பேட்டி!
சென்னை: சீரியல் நடிகை தீபா, ஐந்து வயது மகனுடன் யாருடைய ஆதரவும் இல்லாமல் நடு ரோட்டில நின்னேன் என்று பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் பெண்ணாக எப்படி வாழப்போகிறோம் என்கிற பயம் இருந்தது. ஆனால், அதைவிட எனக்கு தைரியம் இருந்தது அந்த தைரியம் தான் இப்போ வரைக்கும் என்னை ஓடவைத்துக்கொண்டு இருக்கிறது என்றார்.
அன்பே சிவம், அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தீபா. இவருக்கு கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய சாய் கணேஷ் பாபுவுடன் திருமணம் நடைபெற்றது. முதல் கணவரை பிரிந்த தீபா, 15 வயதில் மகன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்தது பெரிய பேசுபொருளானது.

நடிகை தீபா பாபு: இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தீபா, எனக்கு 17 வயதில் திருமணம் நடந்தது, திருமணம் ஆன அடுத்த வருஷமே எனக்கு குழந்தை பிறந்து விட்டது. என் திருமண வாழ்க்கை நான் நினைத்தபடி இல்லை. என் 23வது வயதிலேயே என் திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது. அப்போ என் பையனுக்கு ஐந்து வயசு தான். அவன் கையை பிடித்துக்கொண்டு எங்கே போவது என்று தெரியாமல் நடுத்தெருவில் நின்றேன். அந்த நேரத்தில் எதுக்குடா வாழனும் என்ற எண்ணம் வந்தது. என்னை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் தப்பானவர்களாக இருந்தார்கள். எல்லாமே தப்பா இருந்ததால், எனக்கு அந்த எண்ணம் வந்தது. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு தைரியம் கொடுத்தது என் பையன், அவனுக்காகத்தான் நான் இப்போ வரைக்கும் ஓடிக்கொண்டு இருக்கிறேன்.
தப்பா பார்ப்பார்கள்: சினிமாவிற்கு வந்து 18 வருஷம் ஆகிவிட்டது, இப்போது தான் நல்ல கதாபாத்திரம் வருகிறது. இந்த இடத்திற்கு வர நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஆனால், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த வலி தெரியவில்லை. தனியாக ஒரு பெண்ணாக பல பிரச்சனைகளை நான் சந்தித்து இருக்கிறேன். யாரிடம் உதவி என்று கேட்டாலும், அவர்களின் பார்வை தவறாகத்தான் இருக்கிறது. அப்போதில் இருந்து இப்போது வரை அந்த பிரச்சனையை சமாளித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
இரண்டாம் திருமணம் தேவையா: நான் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட போது, இவ்வளவு பெரிய மகன் இருக்கும் போது இரண்டாம் திருமணம் தேவையா என பலர் கூறினார்கள். என் மகன், என் அப்பா தான் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால், அந்த திருமணமும் ஏன் செய்தோம் என்று பல முறை நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறேன். என் மகன் தான் எல்லாம், அவனுக்காக இன்னும் ஓடிக்கொண்டே இருப்பேன். அவனை நன்றாக படிக்கவைத்தால் அதுபோதும் எனக்கு.
மோசமான கமெண்ட்: எப்போதும் என் மகனுடன் இருப்பதைத்தான் நான் விரும்புவேன், நானும் என் மகனும் சேர்ந்து நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை போட்டு இருந்தேன். அதைப்பார்த்துவிட்டு பலர் மோசமான கமெண்ட்டுகளை போட்டார்கள். அதைப்பார்த்துவிட்டு நான் கலங்கிவிட்டேன். இப்படிக்கூடவா மனுஷங்க இருப்பாங்க என்று தான் தோன்றுகிறது என்று நடிகை தீபா அந்த பேட்டியில் கண்கலங்கி பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











