என் மகன் இறந்ததே எனக்கு தெரியல.. இப்படி ஒரு வாழ்க்கை வாழணுமா.. சாந்தி வில்லியம்ஸ் வேதனை!
சென்னை: மெட்டி ஒலி சீரியலில் கறார் மாமியாராக நடித்துப் பிரபலமானவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். இவரது மகன் சந்தோஷ் நான்கு ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மரணம் குறித்து மனம் உடைந்து பேசிய சாந்தி வில்லியம்ஸ், என் மகன் இறந்தது கூட எனக்கு தெரியாமல், நான் அவனிடம் பேசி விட்டு ஷூட்டிங் போனேன் என்று வேதனையை பகிர்ந்துள்ளார்.
கோயம்புத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் சாந்தி வில்லியம்ஸ், இவர் தனது 11 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த இவர், தமிழில் மாந்தோப்புக் கிளியே, மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சாந்தி வில்லியம்ஸ்: இவர் கேமராமேன் வில்லியம்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவன், குழந்தைகள் என வாழ்ந்து வந்தார். இதையடுத்து, காதல் கணவர் வில்லியம்ஸ் இறந்ததை அடுத்து, குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டிய பொருப்பு வந்ததாலும், பொருளாதார நெருக்கடியாலும் 18 வருஷத்துக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்தார். சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரை பக்கம் வந்த இவருக்கு மெட்டி ஒலி சீரியல் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து சீரியல்களில் அம்மா மற்றும் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
வாழ்ந்து கெட்ட குடும்பம்: இவர் தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனையை வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். அதில், என் கணவர் உயிரோடு இருக்கும் போது பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள், அவர்கள் அனைவருக்கும் நான் சமைத்து கொடுத்து இருக்கிறேன். வேறு யாரும் சமைக்கக்கூடாது நீ தான் சமைக்க வேண்டும் என்பார். அதேபோல ஷுட்டிங்கிற்கும் என் கையால் சமைத்து கொடுத்து அனுப்பவேன். அப்படி இருந்த மனுஷனின் நிலை மாறி, அவர் கீழே வந்த பிறகு, ஒருத்தர்கூட வீட்டுக்கு வரவில்லை வாழ்ந்து கெட்ட குடும்பம் என்றால் அது என் குடும்பம் தான். அந்த நேரத்தில் ரஜினி சார் மட்டும் தான் எங்களுக்கு உதவி செய்தார். அதை என்னைக்குமே நான் மறக்க மாட்டேன்.
கணவர் இறந்த பிறகு: அவர் இறந்த பிறகு, குடும்ப சூழ்நிலையால் மீண்டும் நடிக்க வந்தேன், அதன் பிறககுதான் ஜோடி, களவும் கற்று மற, பெண்ணின் மனதை தொட்டு, பார்த்திபன் கனவு போன்ற படத்தில் நடித்தேன். அதன் பிறகு தான் மெட்டி ஒலி சீரியலில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து சீரியல், சினிமா என பிஸியாக இருந்து என் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தேன்.
இப்படி வாழணுமா: என் மகன் சந்தோஷ் உயிரிழந்தார், இந்த துயரத்தில் இருந்து என்னால் மீண்டு வரவே முடியவில்லை. என் மகன் இறப்பதற்கு முன் தான், அம்மாவிற்கு உடம்பு சரியில்லைடா, நான் இறந்துவிட்டால் எல்லாரையும் பார்த்துக்கோ என்றேன். அப்போது, என் மகன் நீ சாகமாட்டமா நான் தான் சாவேன் என்று சொன்னான். அடுத்த நாள் காலை அவன் இறந்துவிட்டான். அது தெரியாமல் நான் அவன் காலை பிடித்து, டேய் நான் ஷூட்டிங் போறேன்டா என்று சொல்லிட்டு போகிறேன். அவன் இறந்ததே எனக்கு தெரியல. அப்புறம் 3 மணிக்கு போன் வருது, சந்தோஷ் இறந்துவிட்டான் என்று, இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியல, இப்படி ஒரு வாழ்க்கை வாழணுமானு தோணுச்சி என்று சாந்தி வில்லியம்ஸ் கண் கலங்கி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











