டிக்கெட் புக் பண்ணியாச்சா.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!
சென்னை: இந்த வாரம் ஏகப்பட்ட படங்கள் வெளியாக இருப்பதால், சினிமா பிரியர்கள் ஏகத்திற்கும் குஷியில் இருக்கின்றனர்.
பெங்கல் பண்டிகைக்கு வெளியான வாரிசு, துணிவு படங்களுக்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனால், சினிமா பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த வாரம், வரிசை கட்டி பல படங்கள் வெளியாக உள்ளது. அந்த படங்கள் என்னென்ன என்று பார்க்கலாமா?

ரன் பேபி ரன்
இது நாள் காமெடி ஜானர் படங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, த்ரில்லர் ஜானரில் உருவாகி உள்ள ரன் பேபி ரன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படம் பிப்ரவரி 3ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

தி கிரேட் இந்தியன் கிச்சன்
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் அதே பெயரில் தமிழில், ஆர்.கண்ணன் ரீமேக் செய்து வருகிறார். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் பிப்ரவரி 3ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

மைக்கேல்
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷனுடன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் திரைப்படம் மைக்கேல். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ,தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்துள்ள இப்படம், பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

நான் கடவுள் இல்லை
விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில், நான் கடவுள் இல்லை உருவாகி உள்ளது. இதில், சமுத்திரகனி,இனியா, சாக்ஷி அகர்வால், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இத்திரைப்படம், பிப்ரவரி 3 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் பின்னணி
விஷ்ணு விஷால் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ராட்சசன் திரைப்படத்தில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் நடித்த சரவணன் குற்றப் பின்னணி படத்தில், கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு,நேரு, லால் மற்றும் பலர் நடித்துள்ளனர். என்.பி. இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகி உள்ள இத்திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

பொம்மை நாயகி
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் பொம்மை நாயகி. இப்படத்தில், யோகி பாபு, ஸ்ரீமதி, சுபத்ரா,புகழ் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். யோகி பாபுவை இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்துப்பழகிய ரசிகர்களுக்கு, இந்த திரைப்படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பிப்ரவரி 3ந் தேதி வெளியாக உள்ளது.

தலைக்கூத்தல்
சமுத்திரக்கனி, கதிர் நடித்துள்ள திரைப்படம் தலைக்கூத்தல். ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில், சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார். தலைக் கூத்தல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











